'எங்களுக்குத்தான் அதிகாரம்'- கொலிஜியம் விவகாரத்தில் கலகலக்கும் அருண் ஜெட்லி

கொலிஜியம் பரிந்துரையை நிராகரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லி

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் உள்ள கொலிஜியம் குழுவில் இரு நீதிபதிகள் குறைவதால், மற்ற நீதிபதிகள் இணைந்து மற்ற மாநிலங்களில் உள்ள இரண்டு நீதிபதிகளின் பெயரைப் பரிந்துரைசெய்தனர். ஒருவர், இந்து மல்கோத்ரா. மற்றொருவர், கே.எம்.ஜோசப். கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றால் மட்டுமே, இவர்கள் பதவி உயர்வு பெறமுடியும். அதன்படி, கடந்த ஜனவரி மாதம் இந்த இருவரையும் பரிந்துரை செய்தது கொலிஜியம். பரிந்துரைசெய்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், அதுபற்றி மத்திய அரசு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால், நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் நிலவியது. இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் இந்து மல்கோத்ராவின் பரிந்துரையை மட்டும் ஏற்ற மத்திய அரசு, அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் வழங்கியது. 

ஆனால், கே.எம் ஜோசப்பின் பதவி உயர்வு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட அம்சங்களின் கீழ் வரவில்லை எனக் கூறி, அவரை நிராகரித்தது மத்திய அரசு. இது, காங்கிரஸ் தரப்பினரிடமும், உச்ச நீதிமன்ற கொலிஜியத்திலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த நிராகரிப்பைப் பலரும் விமர்சனம்செய்துவந்தனர். 

தற்போது இதற்கு விளக்கமளித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கொலிஜியத்தின் பரிந்துரைகளை நிராகரிக்க மத்திய அரசுக்கு அனுமதி உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், ‘வரலாற்றின் முக்கியமான அத்தியாயத்தை நினைவுபடுத்துதல்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிராகரிக்கப்பட்ட பரிந்துரைகளை வரிசைப்படுத்தி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!