வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (11/06/2018)

கடைசி தொடர்பு:12:40 (11/06/2018)

நள்ளிரவில் சென்னையில் நடந்த பதறவைக்கும் சம்பவம்!

சென்னை செம்மஞ்சேரி சுனாமி நகர் பகுதியில், 15-க்கும் மேற்பட்ட கும்பல், நள்ளிரவில் கத்தி, அரிவாளுடன் குடியிருப்புக்குள் புகுந்து வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளன.

வீடு புகுந்து கும்பல் தாக்குதல்

சென்னை செம்மஞ்சேரி சுனாமி நகரைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்துவருகிறது. இந்த இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி மோதலில்  ஈடுபடுவதுண்டு. இதனால் சுனாமி நகர், பெரும்பாக்கம் பகுதியில் அடிக்கடி வன்முறை  நடப்பதுண்டு. இந்த நிலையில், நேற்றிரவும் வன்முறை  நிகழ்ந்துள்ளது. 

பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சிலர், சுனாமி நகரைச் சேர்ந்தவர்களைப் பழிவாங்க நேற்றிரவு அங்கு வந்தனர். அவர்களின் கையில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன. சுனாமி நகர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த அந்தக் கும்பல், அங்குள்ளவர்களை மிரட்டினர். அதைத் தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால், அலறியடித்துக்கொண்டு பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். மர்மக் கும்பல் தாக்கியதில், சுனாமி நகரைச் சேர்ந்த ஜெயசீலன், ஐயப்பன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மேலும், ஆத்திரம் தீராத அந்தக் கும்பல், அங்குள்ள குடியிருப்புக்குள் புகுந்தது.  மின் பகிர்வுப் பெட்டி, வீடு, கடைகள் என கண்ணில் பட்டதையெல்லாம் சூறையாடியது. இதனால், நள்ளிரவில் வீடுகளில் தூங்கிகொண்டிருந்தவர்கள், தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கதவுகளைத் திறக்கவில்லை. இதுகுறித்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. 

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ''வீடு, கடைகளைச் சூறையாடிய கும்பல்குறித்து விசாரணை நடத்திவருகிறோம். இந்தச் சம்பவத்தில், 15-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். இந்தக் கலவரம் குறித்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்துவருகிறோம். அதில், கத்தி அரிவாளுடன் அவர்கள் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் சிலரை அரிவாளால் வெட்டும் காட்சிகளும் உள்ளன. இந்தக் கொலைவெறித் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி கேமரா காட்சி பதிவுகள் மூலம் கண்டறிந்துவருகிறோம். விரைவில் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், படுகாயமடைந்தவர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது'' என்றனர்.

கும்பல் தாக்கியதில் காயம் அடைந்தவர்

இதுகுறித்து சுனாமி நகர் பகுதி மக்கள் கூறுகையில், ''இரவு 11 மணியளவில் திடீரென எங்க பகுதிக்கு வந்த சிலர், கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதனால், வெளியில் படுத்திருந்தவர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றுவிட்டோம். வீட்டின் வெளியிலிருந்த பைக் மற்றும் பொருள்களை அந்தக்கும்பல் சேதப்படுத்தியது. வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோதல் சம்பவம் மீண்டும் தொடராமலிருக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பகுதியில் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ முடியும்'' என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சுனாமி நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் குற்றப்பின்னணியைக் கொண்டவர்கள் பலர் உள்ளனர். இவர்கள்தான் அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். நேற்றிரவு, சுனாமி நகருக்குள் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த கும்பல் புகுந்து அடாவடிச் செயல்களில் ஈடுபட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதையில் இருந்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மோதல் சம்பவங்களில் ஈடுபடுவோர்மீது நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் அதே செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், இரண்டு தரப்பினரையும் அழைத்து சமரசப் பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காண்பது தொடர்பாக ஆலோசித்துவருகிறோம்'' என்றார்.