வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (11/06/2018)

கடைசி தொடர்பு:14:15 (11/06/2018)

`லெட்டர் கொடுத்தார்களாம்; அப்ரூவல் கொடுத்தார்களாம்!' - ஆணையம் மீது பாயும் தங்க.தமிழ்ச்செல்வன்

`எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளில் மாற்றம் செய்திருக்கிறார்கள். இப்படியொரு மோசடியான தீர்ப்பை, நாங்கள் எதிர்பார்க்கவில்லை' எனக் கொந்தளிக்கிறார் தினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வன். 

தங்க.தமிழ்ச்செல்வன்

ண்ணா தி.மு.க-வின் புதிய சட்டவிதிகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது தேர்தல் ஆணையம். `எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளில் மாற்றம் செய்திருக்கிறார்கள். இப்படியொரு மோசடியான தீர்ப்பை, நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ எனக் கொந்தளிக்கிறார் தினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வன். 

அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க-வின் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் தகவலைக் கொண்டு சென்றனர். இதற்கு ஒப்புதல் அளித்த தேர்தல் ஆணையம், இணையதளத்திலும் தகவல் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை டி.டி.வி.தினகரன் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. 

தங்க.தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். 

``தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ 

``எம்.ஜி.ஆர் வகுத்த அண்ணா தி.மு.க-வின் சட்ட விதிகளின்படி, பொதுச் செயலாளருக்குதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் தகுதி இருக்கிறது. ஓர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னதாக, செய்தித் தாள்களில் விளம்பரம் செய்திருக்க வேண்டும். அந்த அறிவிப்பில், `பொதுக்குழு கூடி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இனி அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவி கிடையாது. இதை அடிமட்டத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதை அறிய விரும்புகிறோம்' என விளம்பரம் செய்திருக்க வேண்டும். இதற்குத் தொண்டர்கள் ஒப்புதல் அளிக்கிறார்களா என்பதைப் பார்த்துவிட்டு, அடுத்தகட்ட முடிவை ஆணையம் எடுத்திருக்க வேண்டும். அப்படி எதையும் செய்யாமல், சட்டவிதிகளைத் திருத்திக்கொள்ளலாம் என்றால், பிறகு எதற்கு ஒரு கட்சிக்குள் சட்ட விதிகளைத் தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது. கட்சியின் பை-லாவைத்தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பை-லாவை மாற்றியது சரி என்றால், அந்தச் சட்டவிதிகளுக்கு என்ன முக்கியத்துவம் இருகிகிறது. எனவே, இது ஓர் அப்பட்டமான மோசடித்தனமான தீர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த முடிவு நிரந்தரமானது அல்ல. அண்ணா தி.மு.க-வும் இரட்டை இலையும் எங்களுக்குதான் சொந்தம் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.'’ 

``ஓராண்டுக்காலமாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. தற்போது திடீரென ஆணையம் முடிவெடுத்திருப்பது ஏன்?’’ 

``இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. 18 எம்.எல்.ஏ-க்களின் தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. இந்தத் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக வருவதற்கான வாய்ப்பு அதிகம். அப்படி வரும்போது, `ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லும்’ என அறிவித்துவிட்டால், `முக்கிய நிர்வாகிகள் யாரும் எங்கள் பக்கம் வந்துவிடக் கூடாது' என்ற அச்சம்தான் காரணம். அந்த அடிப்படையில்தான், இவர்கள் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பை வாங்கியிருக்கிறார்கள். இதற்கு மத்திய அரசும் துணைபோகிறது. `கட்சி எங்களிடம்தான் இருக்கிறது; அதிகாரம் எங்களிடம்தான் இருக்கிறது' எனக் காட்டியிருக்கிறார்கள்.'’ 

``சரி...18 எம்.எல்.ஏ-க்கள் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாக வருகிறது என்றால், இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்ற நீங்கள், எந்தப் பக்கம் நிற்பீர்கள்?’’ 

``அண்ணா தி.மு.க-வும் இரட்டை இலையும் எங்களுக்குதான் என முடிவெடுப்போம்.'’ 

``ஒருங்கிணைப்பாளராகப் பன்னீர்செல்வத்துக்கு அங்கீகாரம் அளித்த பிறகு, இப்படியொரு முடிவை நீங்கள் எப்படி எடுக்க இயலும்?’’ 

``நாங்கள் வழக்கை சந்திப்போம்.’’ 

``நேற்று அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜன் பேசும்போது, 'புதிய பொறுப்பாளர்களை நியமித்து, கட்சியின் கட்டமைப்பை வலுப்பெறச் செய்வோம்' எனப் பேசியிருக்கிறாரே?’’

``புதிய பொறுப்பாளர்களைப் போடட்டும். அப்புறம் என்ன நடக்கிறது என்று பாருங்கள். எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரப்போகிறது எனத் தெரிந்துகொண்டு இப்படியோர் உத்தரவை வாங்கியிருக்கிறார்கள். சார்... நான் தெரியாமத்தான் கேக்கறேன். ஆன்லைனில் யாராவது இப்படியோர் உத்தரவை வெளியிடுவார்களா.. இவர்கள் லெட்டர் கொடுத்தார்களாம். அவர்கள் அப்ரூவல் கொடுத்துவிட்டார்களாம். மிகத் தவறான முடிவு இது. இதற்கு நீதிமன்றத்தில் அவர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.’’ 

``18 எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளும் காலி' என அறிவித்துவிட்டார்கள். மறுதேர்தலும் நடத்தப்படவில்லை. தொகுதி மக்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?’’ 

``பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ-க்களின் தீர்ப்புக்கு இப்போது எந்த அவசரமுமில்லை. அவர்கள் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இவ்வளவு அவசரமாகத் தீர்ப்பு சொல்லும் நீதிபதி, இந்த 18 பேரும் எம்.எல்.ஏ இல்லை என அறிவித்துவிட்டு, தொகுதி காலி எனக் கெஜட்டிலும் வெளியிட்டுவிட்டார்கள். இதற்குத்தான் முதலில் தீர்ப்பு சொல்லியிருக்க வேண்டும். இதிலிருந்தே எங்களிடம் ஓரவஞ்சனை காட்டுகிறார்கள் என்பது தெரிகிறது. தொகுதி மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை என்பதை நினைக்கும்போது ரத்தக்கண்ணீர் வருகிறது. மக்கள் பிரச்னைகள் தொடர்பாக, அதிகாரிகளிடம் பேசினால்கூட, எங்களைத் தீண்டத்தகாதவர்கள்போல ஒதுக்குகிறார்கள். இந்த மன வேதனையை யாரிடம் சொல்லி அழுவது எனத் தெரியவில்லை. எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தாலும் மறுபடியும் தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எதாவது ஒரு தீர்ப்பைச் சொல்லுங்கள் என்றுதான் கேட்கிறோம்.