டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் அனுமதி!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாஜ்பாய்

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து விலகி, ஓய்வெடுத்துவருகிறார். 93 வயதான இவர், இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது, வழக்கமாக நடைபெறும் ஒரு மருத்துவப் பரிசோதனை என்றும், சோதனை முடிந்த பிறகு அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாஜ்பாய், எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநரும் மூத்த மருத்துவருமான ரண்டீப் குலேரியாவின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிகிச்சைபெற்றுவருகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.

வாஜ்பாய், இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார். தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில், 9 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர், இரண்டாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகளில் இந்தியா சிறந்து விளங்கியது. 2015-ம் ஆண்டு, இந்தியாவின் உயரிய விருதான 'பாரத் ரத்னா' விருதை, இந்திய குடியரசுத் தலைவரும், இந்தியப் பிரதமரும் வாஜ்பாயின் இல்லத்துக்கே சென்று வழங்கிக் கௌரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!