`ஜெ. கூறியபடியே, ஏழு பேரை விடுதலை செய்யுங்கள்!' - நடிகர் சத்யராஜ் கோரிக்கை

`அவர்களை விடுதலை செய்யலாம் எனச் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. அதன் அடிப்படையில் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' எனப் பேசியிருக்கிறார் நடிகர் சத்யராஜ். 

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இன்றோடு 27 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. `அவர்களை விடுதலை செய்யலாம் எனச் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. அதன் அடிப்படையில் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' எனப் பேசியிருக்கிறார் நடிகர் சத்யராஜ். 

சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், `நியாயமும் நீதியும் மறுக்கப்படும்போது போராட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்தப் போராட்டத்தில் எத்தனையோ மனவேதனைகள், உயிரிழப்புகளுக்குப் பிறகுதான், அந்தப் போராட்டங்கள் வெற்றியடைகின்றன. அந்த இழப்புகளுக்குப் பிறகு, போராட்டங்களின் மூலம் கிடைத்த வெற்றியைக்கூட நம்மால் சுவைக்க முடியாமல் போய்விடுகிறது. ஆனால், அந்தப் போராட்டங்களின் வெற்றிகள், எதிர்காலத்துக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. அதேபோல் ஒரு போராட்டம் 27 வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் தம்பி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பானது. 

`அவர்களின் விடுதலை சட்டப்படியும் நியாயப்படியும் மனிதாபிமான அடிப்படையிலும் தகுதியுள்ள விடுதலை' எனப் பலராலும் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக, உயர் அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம், சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம், இவை எல்லாம், `ஏழு பேரும் விடுதலைக்குத் தகுதியானவர்கள்' எனக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. இதனை மனதில் வைத்துக்கொண்டு இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் அந்த விடுதலைக்குத் தகுதியானவர்கள். சட்டப்படியும் நியாயப்படியும் மனிதாபிமான அடிப்படையிலும் தகுதியானவர்கள் என நினைப்பதால் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்' என உருக்கமான வேண்டுகோள் வைத்திருக்கிறார். 

வீடியோவை காண க்ளிக் செய்க....

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!