"நீட் தேர்வில் உண்மையான மதிப்பெண்கள் வெளியிடப்படவில்லை...!" பதறும் பெற்றோர்கள்

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், தமிழக மாணவிகள் பிரதீபா, சுபஶ்ரீ தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ``நீட் தேர்வில் பெற்ற உண்மையான மதிப்பெண் மறைக்கப்பட்டு, மதிப்பெண் மாற்றப்பட்டுள்ளது" என்ற அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள். 

நீட்

மே 6-ம் தேதி நீட் தேர்வை நடத்தியது இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. தேர்வு நடத்தி முடித்த இரண்டு நாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடையையும் வெளியிட்டது சி.பி.எஸ்.இ. இந்த விடைகளைத் தேர்வெழுதிய தாளுடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர் மாணவர்கள். இதில், குறிப்பிடத்தக்க அளவு மதிப்பெண் பெற்றிருப்பதாகக் கணக்கிட்ட மாணவர்கள் தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தனர். ஆனால், தேர்வு முடிவு வெளியான பின்பு, நீட் மதிப்பெண்ணைப் பார்த்தவர்கள் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியடைந்துள்ளனர். 500 மதிப்பெண்ணுக்குக் கூடுதலாகப் பெறுவோம் எனக் கணக்கிட்டவர்களுக்கு 140 - 150 மதிப்பெண் என்று இருக்க, பாதிக்கப்பட்ட மாணவிகள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருக்கின்றனர். 

புருஷோத்தமன்பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூரைச் சேர்ந்த சரீஸ்மா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் டூ-வில் 1,023 மதிப்பெண் பெற்றவர், மருத்துவம் படிக்க வேண்டும் என்று முழு முயற்சியில் இரண்டு ஆண்டு பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதி இருக்கிறார். தேர்வு எழுதிய அடுத்த நாள் நீட் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ இணையதளத்தில் வெளியிடப்பட்ட பதில்களையும், தான் எழுதிய பதிலையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார். சரியாகப் பதிலளிக்காத கேள்விகளுக்குக் குறைக்கப்படும் மதிப்பெண்ணை எல்லாம் கழித்துபார்த்த பின்பு 513 மதிப்பெண் கிடைத்திருக்கிறது. நீட் தேர்வு முடிவு வெளியான பின்பு, நிச்சயம் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் என்று காத்திருந்த சரீஸ்மாவுக்கு, ஜூன் 4-ம் தேதி நீட் தேர்வு முடிவில் 142 மதிப்பெண் மட்டும் பெற்றிருக்கிறார் என்று பதிவாகி இருக்கிறது. இதனால் மொத்த குடும்பமே மனமொடிந்த நிலையில் உள்ளனர். 

சரீஸ்மாவின் அப்பா புருஷோத்தமன், ``நான் ஒரு விவசாயி. இரண்டு மகள்கள். கஷ்டப்பட்டு பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். மருத்துவம் படிக்க ஆசைப்பட்டாள் இரண்டாவது பொண்ணு சரீஸ்மா. இரண்டு வருடங்களாகப் பயிற்சி செய்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினாள். தேர்வு முடிந்தவுடன் வெளியிடப்பட்ட விடைகளுடன் ஒப்பிட்டபோது, 513 மதிப்பெண் வந்தது. ஆனால், நீட் தேர்வு முடிவுக்குப் பின்னால் மதிப்பெண் குறைந்திருக்கிறது. நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடி நடந்திருக்கிறது. இதுகுறித்து சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ அலுவலகத்தில் முறையிட்டோம். சென்னை சி.பி.எஸ்.இ அலுவலக அதிகாரிகள் டெல்லி அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பச் சொல்கிறார்கள். இதுவரை 10 முறை மெயில் அனுப்பியுள்ளோம். ஆனால், ஒரு பதிலும் வரவில்லை. சென்னை அலுவலகத்தில் மீண்டும் அணுகினால் டெல்லிக்குப் போய் பாருங்கள் என்று சொல்கிறார்கள். என்னுடைய மகளைப் போலவே நிறையப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். மாநில அரசு தவறு செய்தால் மத்திய அரசிடம் முறையிடலாம், ஆனால் மத்திய அரசே தவறு செய்தால் நாங்கள் எங்கு சென்று முறையிடுவது" என்று கதறினார். 

நீட் புகார்

மகேஷ் கண்ணாகடலூரில் வசிக்கும் மகேஷ் கண்ணா, "என்னுடைய மகள் ப்ளஸ் டூ தேர்வுக்குப் பின்பு நீட் தேர்வு எழுதி இருந்தார். சி.பி.எஸ்.இ வெளியிட்ட விடைகளுடன் ஒப்பிட்டபோது, 240 மதிப்பெண் வந்தது. 90 கேள்விகளுக்கு விடையளித்திருந்ததில், 60 கேள்விகளுக்கு மிகச் சரியாக விடையளித்திருப்பது தெரிந்தது. ஆனால், தேர்வு முடிவில் 94 மதிப்பெண் பெற்றிருப்பதாக இருக்கிறது. எப்படிப் போட்டு பார்த்தாலும் 94 மதிப்பெண் வருவதற்கு வாய்ப்பில்லை. நாங்களும் சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ அலுவலகத்தை அணுகினோம். ஆனால், டெல்லிக்கு மெயில் அனுப்புங்கள் என்றுதான் சொல்கின்றனர். மெயில் அனுப்பினோம். ஆனால், எந்தவிதமான பதிலும் இல்லை. தமிழ்நாட்டில் யாரை அணுகுவது என்று தெரியவில்லை. தற்போது நடந்து வரும் சம்பவங்களைப் பார்த்து மகளுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டியிருக்கிறது" என்று விரக்தியில் பேசினார். 

கோவையைச் சேர்ந்த மாணவியும் இதேபோல் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவர், ``நீட் தேர்வு முடிவுக்குப் பின்பு விடைகளுடன் ஒப்பிட்டபோது 541 மதிப்பெண் பெற்றிருந்தாகக் காண்பிக்கப்பட்டது. ஆனால், நீட் முடிவு அறிவிக்கப்பட்டபோது 179 மதிப்பெண் மட்டுமே பெற்றிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்து என்ன ஆகப்போகிறது. அடுத்த தேர்வுக்குத் தயாராகி வருகிறேன்" என்றார். 

சென்னையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி, ``என் மகன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள பள்ளியில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடித்தவுடன் நீட் தேர்வு எழுதினான். தேர்வெழுதிய அடுத்த நாள் சி.பி.எஸ்.இ வெளியிட்ட விடைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் 400-க்கும் கூடுதலான மதிப்பெண் வந்தது. ஆனால், தேர்வு முடிவில் 258 மதிப்பெண் மட்டுமே உள்ளது. நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்தா அல்லது இதுவும் கம்ப்யூட்டர் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டதுபோல் கணினியால் தவறு நடந்ததா என்பது குறித்து சி.பி.எஸ்.இ உரிய விளக்கம் கொடுக்க வேண்டும். எந்த மாணவரும் பாதிப்படையா வண்ணம் மறு மதிப்பீடு செய்ய வேண்டும்" என்றார். 

கல்வியாளர் நெடுஞ்செழியன்கல்வியாளர் நெடுஞ்செழியன், "தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் ஏராளமான குளறுபடிகள். தமிழகத்தில் நீட் தேர்வு மையத்தில் கேள்வித்தாள் பற்றாக்குறையால் ஜெராக்ஸ் எடுத்து வழங்கப்பட்டது. இதுவே மிகப்பெரிய தவறு. இந்த மையங்களில் தேர்வு எழுதியவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றார்கள் என்று தெரியவில்லை. 

மேலும், நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையில் மாறுபட்ட தகவலை வழங்கி இருக்கிறது சி.பி.எஸ்.இ. இதைப்போலவே, நீட் தேர்வு முடிந்தவுடன் வெளியிடப்பட்ட மதிப்பெண்ணுக்கும்
நீட் தேர்வு முடிவின் வெளியிடப்பட்ட மதிப்பெண்ணுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. சி.பி.எஸ்.இ 13 லட்சம் மாணவர்களின் கனவுடனும் எதிர்பார்ப்புடனும் விளையாடி இருக்கிறது. ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வை சிறந்த முறையில் நடத்திவிட்டு நீட் தேர்வை இவ்வளவு மோசமாக நடத்துவது முறைகேடுகளில் ஒன்றாகப் பார்க்கத்தோன்றுகிறது" என்றவர்,

``நீட் தேர்வை இந்தியிலும், ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுதியவர்கள் அதிகம். தேர்ச்சி விகிதமும் அதிகம். இதனால் மாநில மொழிகளைப் புறக்கணிக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது. இனிவரும் காலங்களில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் தேர்வெழுதினாலும், பயிற்சி மையத்தில் படித்தாலும் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற மாயையையும் உருவாக்கி வருகிறார்கள். மேலும், குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் படிப்பவர்கள், குறிப்பிட்ட தேர்வு மையத்தில்தான் தேர்வெழுத வேண்டும் என்ற முறையையும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நீட் தேர்வு குறைபாடுகளை வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன" என்றார். 

பெற்றோர்களின் குற்றச்சாட்டு குறித்து, சென்னையில் உள்ள தென்மண்டல சி.பி.எஸ்.இ அலுவலகத்துக்கும், டெல்லியில் உள்ள சி.பி.எஸ்.இ-யின் நீட் உதவி மையத்துக்கும் தொலைப்பேசியில் அழைத்து விளக்கம் கேட்க முயற்சி செய்தோம். ஆனால், எந்தவிதமான பதிலும் இல்லை. இது குறித்து. சி.பி.எஸ்.இ  விளக்கமளித்தால் பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!