வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (11/06/2018)

கடைசி தொடர்பு:17:38 (11/06/2018)

`வீரமரணமடைந்த தந்தையின் படைப்பிரிவில் சேர்ந்த ராணுவ வீரரின் மகன்!'- 19 ஆண்டுகளுக்குப் பின் நெகிழ்ச்சி சம்பவம்

கார்கில் போரில் தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து 19 ஆண்டுகள் கழித்து அதே படைப்பிரிவில் அவரின் மகன் சேர்ந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்கில் போரில்  தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து 19 ஆண்டுகள் கழித்து அதே படைப்பிரிவில் அவரின் மகன் சேர்ந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்கில்

 
1999-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் என்ற இடத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்தனர். அதில் ராஜ்புதானா ரைபில்ஸ் பிரிவில் 2வது பட்டாலியனாகப் பணியாற்றிய பச்சான் சிங் என்ற ராணுவ வீரரும் ஒருவர். 1999-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி பச்சான் உயிரிழந்தார். ஆறுவயது சிறுவனான ஹித்தேஷ்க்கு தன் தந்தையின் இழப்பு தாங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியது. அப்போது தன் தந்தையைப்போல தானும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டது. இதற்கு ஹித்தேஷின் தாயும் உறுதுணையாக இருந்தார்.

இதையடுத்து, தன் கனவு மெய்ப்படும் வகையில் டேராடூனில் உள்ள ராணுவ மையத்தில் பயிற்சி பெற்ற ஹித்தேஷ் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, ராணுவத்தில் சேர்ந்தார். ஆச்சர்யம் என்னவென்றால், தன் தந்தை பணியாற்றிய அதே பட்டாலியனில் ஹித்தேஷூம் பணியில் சேர்ந்ததுதான். தற்போது 25வயதான ஹித்தேஷ்  பணியில் இணைந்ததும், தன் தந்தையின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். இது தொடர்பாகப் பேசிய ஹிதேஷ், 6 வயதில் தான் கண்ட கனவு நனவாகியுள்ளதாகவும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவதை தான் பெருமிதமாகக் கருதுவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து அவரின் தாய் கூறுகையில், பச்சான் உயிரிழந்தபோது கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் ஒன்றும் புரியாமல் மிகவும் சிரமப்பட்டேன். ஆனால், தற்போது என் மகன் ராணுவத்தில் இணைந்திருப்பதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். என் இரண்டாவது மகனும் ராணுவத்தில் சேர உள்ளான். `இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்' எனக் கண்ணீர் மல்கப் பேசினார். இது தொடர்பாக வீர மரணமடைந்த பச்சானுடன் பணியாற்றிய ரிஷிபல்சிங் பேசும்போது, பச்சான் ஒரு துணிச்சல் மிகுந்த வீரர் எனப் புகழாரம் சூட்டினார். அவர் மகன் இன்று அதே பணியில் சேர்ந்து அவருக்குப் பெருமிதம் தேடித்தந்துள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.