`ஒரு தாயின் புலம்பலுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை’ - தூத்துக்குடியில் கி.வீரமணி வேதனை

``தமிழக வரலாற்றிலேயே மக்கள்மீது இதுபோன்ற துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை. அமைதி திரும்பிவிட்டது என அரசு கூறி வந்தாலும், இந்தச் சம்பவம் நடந்து 20 நாள்கள் ஆன நிலையிலும் மக்கள் மனதில் அமைதி திரும்பவில்லை" எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

வீரமணி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எதிர்காலச் சந்ததியாவது நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும். நஞ்சாகிப்போன நிலமும் நீரும் தடுக்கப்பட வேண்டும். தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்காகக் கிராம மக்கள் கடந்த 100 நாள்களாகத் தன்னெழுச்சியான போராட்டங்களை நடத்தி வந்தனர்.

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலாலும், துப்பாக்கிச் சூட்டாலும் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 100 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். இதற்கு முன்பு மற்ற மாநிலங்கள், நாடுகளில் இதைவிட வன்முறைச் சம்பவங்கள் நடந்த போதிலும் மக்கள்மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை. 13 பேர் வரை உயிரிழந்தது இதுவரை தமிழகத்தில் நடைபெறாத ஓர் அசம்பாவிதச் சம்பவம்.

அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருபவர்கள் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். பதற்றத்துடனேயே காணப்படுகிறார்கள். மக்களின் மனதில் இன்னும் அமைதி திரும்பவில்லை. காவல்துறை உங்கள் நண்பன் எனச் சொல்லி வந்த நிலையில், தற்போது மக்களுக்கு எதிரிதான் காவல்துறையோ என்கின்ற சந்தேக நிலை ஏற்படுகிறது. தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமூக விரோதிகள் எனக் கூறிவருவது சரியல்ல. இந்த மண்ணின் மைந்தர்கள் யாரும் சமூக விரோதிகள் அல்ல. இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசுக்கு ஓர் அன்பான வேண்டுகோள், நீங்கள் இதுவரையில் நடந்தவை அனைத்துக்கும் பொறுப்பேற்கத் தயாராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு உதவிடும் நிலைப்பாட்டில் இருந்தாலும் மக்களின் நிலைப்பாட்டையும் புரிந்து கொள்ள வேண்டும். `குண்டடிபட்டு ஒற்றைக் காலை இழந்து தவிக்கும் என் மகனைப் பார்க்கும்போது ஒவ்வொரு நிமிடமும் ரணமாக உள்ளது' என ஒரு தாயின் புலம்பலுக்கு என்ன ஆறுதல் சொல்லுவதென்றே தெரியவில்லை. இதில் எந்த அரசியலும் இல்லை. மனிதாபிமானம்தான் இப்போது தலையாயதாக இருக்க வேண்டும். குடிமக்கள் காப்பாற்றப்பட வேண்டும். மக்களின் உரிமைகளை மதிக்காத அரசு நீடித்தது இல்லை. மக்களின் கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!