வெளியிடப்பட்ட நேரம்: 20:27 (11/06/2018)

கடைசி தொடர்பு:20:27 (11/06/2018)

`ராகுல்காந்தி கருத்துதான் எங்களுக்கும்!' - பேரறிவாளன் குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும், இன்றோடு 27 ஆண்டுகள் சிறை வாழ்க்கையை நிறைவு செய்துவிட்டனர். `பேரறிவாளன் உள்ளிட்டவர்களை மன்னித்துவிட்டோம் என ராகுல்காந்தியே கூறிவிட்டார். இதில் முடிவெடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகள்தாம்' என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் 

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் கடந்த 27 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. `மனிதாபிமான அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய வேண்டும். குறிப்பாக, `பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் திரித்து எழுதிவிட்டேன்' எனக் கூறிய சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன், அதை ஒரு மனுவாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். `நீண்டகாலமாகச் சிறையில் இருப்பதால், சட்டப்படி இவர்களை விடுதலை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசினோம். 

``பேரறிவாளன்மீது எனக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அவருக்குத் தொடர்பிருப்பது உண்மையா...பொய்யா எனத் தெரியவில்லை. இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அவர்களை மன்னித்துவிட்டோம் என்று. அவரே மன்னித்து விட்ட பிறகு, இதில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் விரைவில் முடிவு செய்ய வேண்டும். சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக எங்களுக்கு வேறுபட்ட கருத்து எதுவும் இல்லை. அவர்கள் குற்றவாளியா... இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றமும் மத்திய , மாநில அரசுகளும்தாம். உண்மையான குற்றவாளிகள் இல்லை என நிரூபிக்கப்பட்டுவிட்டு, விடுவிக்கப்பட்டால் மகிழ்ச்சிதான்” என்றார்.