மொட்டை அடிப்பதில் முறைகேடா? நாகூர் தர்காமீது அதிர்ச்சி புகார்

Nagoor Dharha

``யாரும் வருவார், யாரும் தொழுவார் நாகூர் ஆண்டவர் சந்நிதியில்'' என்று பாடல்பெற்ற நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்காவில் சாதி, மத பேதமின்றி அனைத்து மதத்தினரும் வழிபாடு செய்து வருகின்றனர். இங்கு நேர்த்திக்கடனாக முடிக் காணிக்கை செலுத்த வந்த பக்தர் ஒருவரிடம் கூடுதல் பணம் கேட்ட விவகாரம், உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.   

 நாகூர் தர்கா

தற்போது கோடை விடுமுறை என்பதால் நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தர்கா குளத்திலும் அனைவரும் குளித்து சந்தோஷமடைந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது தாயாரின் நேர்த்திக்கடனை நிறைவேற்ற நாகூர் தர்காவில் முடிக்காணிக்கை செலுத்த கடந்த மாதம் வந்திருந்தார். ராஜேஷ் முறைப்படி மொட்டை அடிக்க டோக்கன் வாங்கிச் சென்றுள்ளார். அங்கு, ராஜேஷிடம் அதிகப்படியான தொகையைக் கேட்டது மட்டுமன்றி, பணம் கொடுக்கவில்லையென்றால் தர்கா குளத்தில் மூழ்கடித்து, சாகடிக்கப்படுவாய் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தர்கா நிர்வாகத்திடம் புகார் அளிக்கச் சென்ற ராஜேஷை, தர்கா ஊழியர்கள் மிரட்டி உள்ளதாகவும் தெரிகிறது.  

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஷ், நாகூர் காவல் நிலையத்துக்குச் சென்று இன்ஸ்பெக்டர் குலோத்துங்கனிடம் புகார் அளித்துள்ளார். அதற்கான மனு ரசீதும் பெற்றுள்ளார். ஆனால், இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன், என் புகார்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார் ராஜேஷ். கடந்த 2 மாத காலமாக போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இப்புகாரின் மீது முகாந்திரம் இருந்தால் உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாகூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.  

இதுபற்றி நாகூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் குலோத்துங்கனிடம் விளக்கம் கேட்டபோது, ``புகார் கொடுத்த ராஜேஷ் சென்னை சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் விசாரணைக்கு வரவில்லை. அவர் போதையில் மொட்டை அடிப்போரிடம் தகராறு செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது. ராஜேஷ் விசாரணைக்கு வராமல் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். இன்று வரை உயர்நீதிமன்றத்திலிருந்து எனக்கு எவ்வித உத்தரவும் வரவில்லை'' என்று முடித்துக்கொண்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!