`பெ.மணியரசன் மீதான தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது!’ கொதிக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர்

பெ.மணியரசன் மீது நடத்தபட்ட தாக்குதல் வழிப்பறிக்காக நடத்தபடவில்லை... திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

 பெ.மணியரசன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழி ப்பறிக்காக நடத்தப்படவில்லை; திட்டமிட்டே  நடத்தப்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் நடத்தியக் கடுமையான தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதனை போலீஸார் வழிப்பறி சம்பவத்திற்காக நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கூறி வழக்கை முடிக்க பார்ப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தபட்டுள்ளதாகவும் இதை தீர விசாரிப்பதோடு இதற்கு காரணமானவர்களை கைது செய்வதுடன் எதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற உண்மை நிலையையும் வெளியே கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கதின் தலைவரும்,காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பவர் பெ.மணியரசன். இவர் தன் இயக்கத்தினரோடு சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், மீத்தேன் மற்றும் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தி வந்தார். தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் மண்ணைக் காக்கின்ற வகையில் பல அதிரடி போராட்டங்களையும் நடத்தினார்.

கடந்த 20 தினங்களுக்கு முன்பு பெரும் கூட்டத்தைத் திரட்டி மத்திய அரசுக்கு எதிராக தஞ்சாவூர் விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார். அப்போது பெரும் படையோடும், அதி நவீன வாகனங்களோடும் பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் இவர்களை பாதியிலேயே தடுத்து நிறுத்தினர். இதற்கு அப்போது தமிழக அரசு மத்திய அரசின் கைக்கூலியாகச்  செயல்படுகிறது எனக் கடும் கண்டனத்தை தெரிவித்தார் மணியரசன்.

இதேபோல் கதிராமங்கலம் மக்கள் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராட ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்ததை காட்டும் விதமாக அங்கு அறவழியில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் கலந்துகொண்ட பல அமைப்புகளைச் சேர்ந்த 25 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர். இதில்  பெ.மணியரசன் மீதும் வழக்கு பதிந்தனர்.மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பதில் ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரம் இல்லாத இந்த ஆணையம் காவிரி நீரை பெற்றுத் தராது. இது வெறும் கண் துடைப்பிற்காக மட்டும்தான் ஏற்படுத்தபட்டுள்ளது என மத்திய அரசின் மீது குற்றம்சாட்டி வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு சென்னை செல்வதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் தோழர் ஒருவருடன் பின் பக்கம் உட்கார்ந்து கொண்டு வந்தார் மணியரசன். இவர்களை மற்றொரு இரண்டு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், மணியரசன் கையைப் பிடித்து இழுத்துத் தள்ளி விட்டனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவருக்குக் கால் முட்டி, கை என உடம்பின் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனைக்கு எதிரே போலீஸார்  நிறுத்தப்பட்டுள்ளதோடு, உளவுப் பிரிவு போலீஸாரும் மணியரசனை யார் யாரெல்லாம் பார்க்க வருகிறார்கள் எனக் குறிப்பெடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஏற்கெனவே தமிழகத்தின் உரிமைக்காகத் தீவிரமாகப் போராடி வரும் தமிழ் அமைப்பின் தலைவர்கள்மீது வழக்கு பதிந்து அவர்களை கைதும் செய்து வருகிறது அரசு. அரசின் இந்தச் செயலுக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தாலும் ஆட்சியாளர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் மண்ணுக்காகக் குரல் கொடுப்பவர்கள்மீது வழக்குபதிந்து கைது செய்வதற்கு தயாராகி வருவதாகச் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் மணியரசன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அவரை அச்சுறுத்துவதற்காகவே நடத்தப்பட்ட ஒன்றாகப் பார்க்கிறார்கள் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ராசு.முனியாண்டியிடம் பேசினோம், `மணியரசன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அவரை பயமுறுத்துவதற்கும், போராட்டங்களில் பங்கெடுப்பதைத் தடுப்பதற்கும் யாரோ ஒருவர் ஏவலின் பேரில் தீய சக்திகளைக் கொண்டு நடத்தப்பட்டிருக்கிறது. இது வழிப்பறிக்காக நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை. திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. 
வழிப்பறிக்காக நடந்திருந்தால் தாக்கியவர்கள் ஏன் கையில் வைத்திருந்த பேக்கை கூட பிடுங்கிக் கொண்டு செல்லவில்லை. மேலும் கொஞ்சம் தூரம் சென்ற பிறகு நிதானமாகத் திரும்பிப் பார்த்துச் சென்றுள்ளனர். அதோடு அரசு தமிழ் அமைப்பின் தலைவர்களை போராட்டங்களை ஒடுக்கும் விதமாக வழக்கு, கைது என பயமுறுத்தி வருகிறது. இந்தத் தாக்குதலை வேறு விதமான அச்சுறுத்தலாகவே நாங்கள் பார்க்கிறோம். ஆனால், காவல்துறையினர் இதை வழிப்பறிக்காக நடத்தப்பட்ட தாக்குதலாகவே பார்த்து வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள். அப்படிச் செய்யாமல் போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து விசாரிப்பதுடன் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து எதற்காக நடத்தப்பட்டது என்ற உண்மை நிலையை வெளியே கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

பெ.மணியரசனிடம் பேசினோம், ``வழிப்பறிக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்றால் நான் அடிபட்டு நிலை தடுமாறி நீண்ட நேரம் கீழே கிடந்தேன். அப்போது என் பேக்கை எடுத்துக்கொண்டு சென்றிருக்கலாம் அப்படிச் செய்யவில்லை. என்னை நிலைதடுமாற வைத்து தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். ஆகவே, என் மீது நடத்தபட்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே நான் கருதுகிறேன்’’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!