ஒரு குடம் எடுத்துவர 2 மணிநேரம்! மலை, காடுகளில் குடிநீருக்காக அலையும் மக்கள்

வனப்பகுதியில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர் மலை கிராம மக்கள்.

வனப்பகுதியில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர் மலை கிராம மக்கள்.

குடிநீர்

வேலூர் மாவட்டம், ஜவ்வாதுமலை தொடரில் அமிர்தி வனப்பகுதியில் பழாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது நெக்கினி மலை கிராமம். இந்த மலை கிராமத்தில் 150 குடும்பங்களுக்கு மேல் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். பல தலைமுறைகளாக மலை பகுதியிலேயே வசித்து வரும் இவர்களுக்கு, குடிநீர் வசதி இதுவரை அரசுத் தரப்பில் செய்து தரப்படவில்லை. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில், ``குடிநீருக்காக மலைப் பகுதியில் காட்டு வழியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கானாற்று பகுதியில் உள்ள சிறிய ஊற்றுநீரை எடுத்து வருகிறோம். காட்டுவழியில் 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் என்பதால் 10 பெண்கள் ஒன்றுகூடி தான் தண்ணீரை எடுத்து வருகிறோம். ஊற்றில் சில சமயங்களில் தண்ணீர் வற்றி விடுவதால் குறைவான நீரே கிடைக்கும். அதுவும் நீரை எடுக்கும்போதே கலங்கிவிடும். அதனால், அந்த நீரையே வடிகட்டி எடுத்துவருகிறோம். நீர் குறைவு காலங்களில், 10 குடம் நீர் எடுக்க 2 மணி நேரம் காத்துக்கிடக்க வேண்டிய சூழல் உருவாகிவிடும். ஒரு குடம் தண்ணீர் எடுத்துவர குறைந்த பட்சம் 2 மணி நேரம் வேண்டும்.

இதனால் குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வரவேண்டியது இருக்கிறது. குழந்தைகளை கவனிக்க முடியவில்லை. அதேபோல் ஒரு சில குடும்பங்களில், 6 பேர் முதல் 8 பேர் வரை உள்ளார்கள். ஆறு பேருக்கும் உணவு செய்ய மற்றும் குடிக்க அதிக நீர் தேவை ஏற்படுகிறது. அதனால் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 3 முறை நடந்து சென்று குடிநீர் எடுத்துவரும் நிலை உள்ளது. மலை காடுகளை கடந்து குடி தண்ணீர் எடுத்து வரும் நிலையில் சில சமயங்களில் கால் வலியால் அவதிப்படுகிறோம். உடல் நிலை சரியில்லாத நேரங்களில் தண்ணீருக்காக மிகுந்த வேதைப்படுகிறோம்" என வேதனையுடன் கூறினர்.

குடிநீர்

``நெக்கினி மலை கிராமத்தைப் பொறுத்தவரை, அரசு சார்பில் கடந்த 1 வருடமாகச் சுமார் 40 அடி ஆழத்துக்குக் கிணறு வெட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணி ஆமை வேகத்தில் உள்ளது. இந்தப் பணியை விரைந்து முடித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால், தண்ணீர் பிரச்னை தீரும். அதேபோல் நெக்கினி, தானிமரத்தூர், அரசமரத்தூர், கொலையம், ஊரானூர் ஆகிய மலை கிராமங்களில் 2008-ல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவராமல் உள்ளது. எங்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு மலை கிராமங்களுக்குத் தண்ணீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மலை கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் கேட்டபோது, ``நெக்கினி மலை கிராம மக்களுக்குக் குடிநீர் கிடைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கிணறு வெட்டும் பணியில் தொய்வு இருப்பின் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, ``நான் தற்போதுதான் புதியதாகப் பொறுப்பேற்றுள்ளேன். பொறுப்பேற்ற நாளிலிருந்து ஒவ்வொரு மலை கிராமத்துக்கும் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு வருகிறேன். கடந்த சில நாள்களுக்கு முன் நெக்கினி மலை கிராமத்துக்குச் சென்று ஆய்வு செய்தோம். கிணறு வெட்டும் பணி இன்னும் நிறைவடையவில்லை. பணி நிறைவடைந்த உடன் தண்ணீர் விநியோகம் செய்யப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!