`நூலகத்தையும் தார்ச்சாலையையும் காணவில்லை!’ - ஆட்சியர் அலுவலகத்தை அதிரவைத்த புகார்

புகார்

30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நூலகத்தையும், 8 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துபோன தார்ச்சாலையையும் கண்டுபிடித்து கொடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தி சேலம் கலெக்டரைச் சந்தித்துக் கொடுத்திருக்கிறார்கள். கிணற்றைக் காணவில்லை என்ற சினிமா பாணியில் நூதன ஆர்ப்பாட்டமாக நூலகத்தையும், தார்ச்சாலையும் காணவில்லை என்றதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தார்கள்.

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் பிரவின், ``சேலம் மாநகர் 49வது கோட்டம் அன்னதானப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே நூலகம் ஒன்று இருந்தது. இது சேலம் நகராட்சியாக இருந்தபோது செயல்பட்டு வந்த நூலகம். கடந்த 30 ஆண்டுகளாகச் செயல்படாமல் மூடிக் கிடக்கிறது. அதனால் நூலகத்துக்குள் இருந்த புத்தகங்கள் அனைத்தும் கரையான் அரித்துக் காணாமல் போய் விட்டது. இப்பகுதியில் வசிக்கும் பலருக்கும் இது நூலகம் என்று கூட தெரியாமல் பூட்டி பாலடைந்த வீடாகக் காட்சியளிக்கிறது.  

அதேபோல், பழனியப்பா காலனி, ராமசாமி தெரு, முனுசாமி தெரு, அகத்தியர் தெரு, கண்ணகி தெரு, மாரியம்மன் கோவில் மெயின் ரோடு போன்ற பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தார்ச்சாலை இருந்தது. அந்தத் தார்ச்சாலை மிகவும் மோசமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவானது. காலைப் போக்கில் இங்கு ஒரு சாலை இருந்தது என்று கூட தெரியாமல் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கிறது. மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் பல முறை கோரிக்கைகள் வைத்தும் பயனில்லை. அந்த நூலகத்தையும், தார்ச்சாலையும் அரசு அதிகாரிகள் கண்டுபிடித்து மக்கள் பயன்படுத்தும் வகையில் புதுப்பித்துத் தரவேண்டும். இல்லையேல் மாவட்ட அளவில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!