`தமிழக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது!’ - கே.பாலகிருஷ்ணன் விளாசல்

போராடுகிறவர்கள் மீது தேச விரோத வழக்கு போடுவதை வழக்கமாக உள்ள இந்த தமிழக அரசு இதனை நிறுத்தாவிட்டால் எல்லோரும் சேர்ந்து போராட்டம் நடத்துவது தவிர வேறு வழியில்லை.

தமிழக அரசை சம்மன் அனுப்பாமலேயே வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் `போராடுவோம் தமிழகமே’ என்ற முழக்கத்தோடு பிரசார வாகனப் பயணத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலருகிஷ்ணன் இன்று கடலூர் முதுநகரில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பிரசார வாகனம் தமிழகம் முழுவதும் சென்று வரும் 14ம் தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நிறைவடையும்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை கே. பாலகிருஷ்ணன் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது ``தமிழகத்தில் இன்று உள்ள ஆட்சி கேடு கெட்ட ஆட்சியாக இருப்பது வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. பத்திரிகையாளர்களைக் கேவலமாகப் பேசிய எஸ். வி. சேகரை கைது செய்ய திராணி இல்லாத இந்த அரசு, தொலைக்காட்சிகள் மீதும் இயக்குநர் அமீர் மீதும் வழக்குபதிவு செய்து சம்மன் அனுப்பியுள்ளது. இந்த அரசை சம்மன் அனுப்பாமலேயே வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டு  போராடிக்கொண்டிருக்கிறார்கள். கல்வி நிலையங்களில் கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை அதலபாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது. தமிழக அரசு அதைத் தூக்கி பிடிக்கும் அரசாகத்தான் உள்ளது. இதையெல்லாம் கண்டித்துதான் இந்தப் பிரசாரப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஊடகங்களின் கழுத்தை நெறிக்கும் செயலில் எடப்பாடி அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. மேலும், போராடுகிறவர்கள் மீது தேச விரோத வழக்கு போடுவதை வழக்கமாகக்கொண்டுள்ள இந்தத் தமிழக அரசு இதனை நிறுத்தாவிட்டால் எல்லோரும் சேர்ந்து போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. வரும் ஜூலை முதல் வாரம் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகம் வருவதாகத் தெரிவித்துள்ளார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மதக் கலவரம் நடைபெறுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!