திருச்செந்தூர் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் ஓங்கல் இனத்தைச் சேர்ந்த டால்பின் இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.  

டால்பின்

தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னக்காயல், காயல்பட்டினம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் மற்றும் மணப்பாடு வரையிலான கடலோரப் பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு டால்பின்கள் உயிருடனேயே கரை ஒதுங்கின. மீனவர்கள் படகு மூலம் சில மீட்டர் தூரம் வரை கடலுக்குள் சென்று விடப்பட்ட போதிலும் மீண்டும் கரைக்கு வந்து, இறந்து போனது. அதிலிருந்து தொடர்ந்து ஒன்று, இரண்டு ஆகிய எண்ணிக்கையில் இப்பகுதிகளில் அவ்வப்போது உயிரிடனும், இறந்த நிலையிலும் கரை ஒதுங்கியது. இந்நிலையில் இன்று, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரைப் பகுதியில் அய்யா வைகுண்டபதி கோயிலுக்கு அருகில் இறந்து, உடல் அழுகிய நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது.  

டால்பின்

கரையில் கிடந்த டால்பினைப் பார்த்ததும், மக்கள் ஆலந்தலை கடலோரப் பாதுகாப்பு போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். சுமார் 4 அடி நீளமும், 70 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. ``இது டால்பின்களில் ஓங்கல் வகை இனத்தைச் சேர்ந்தது. அதன் வயிற்றுப்பகுதி அறுபட்டுள்ளதால், கப்பலில் அடிபட்டோ, பாறைகளில் மோதியோ அல்லது இவ்வகை டால்பின்களின் எதிரியான சுறாக்களுடன் சண்டையிடும் போதோ கூட இறந்திருக்கலாம்." என போலீஸார் தெரிவித்தனர். துர்நாற்றம் அதிகம் வீசியதால் உடனடியாக டால்பின் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது. இறந்த நிலையில் கிடந்த டால்பினை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!