வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (11/06/2018)

கடைசி தொடர்பு:11:11 (12/06/2018)

`சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து 8 வழி பசுமை சாலையை நிறுத்துவோம்!’ - தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சி

சேலம் - சென்னை இடையில் அமைய இருக்கும் 8 வழி பசுமை சாலையை எதிர்த்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியினர் சேலம் கலெக்டரை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக 8 வழி பசுமை சாலை தேவையில்லை என்பதை வலியுறுத்தி புகார் மனு அளித்தார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ்

கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, ''8 வழி பசுமை சாலையால் சேலம், ஈரோடு, கோவை போன்ற அருகில் உள்ள மாவட்டங்களுக்கும், தமிழகத்திற்கு என்ன பயன் கிடைக்க போகிறது.  ஏற்கனவே சேலம் - சென்னைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாகவும், சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி  வழியாகவும், அரூர் ஊத்தங்கரை வழியாகவும் 3 வழிகளில் பாதைகள் இருக்கிறது.

யுவராஜா.பெங்களூரு - பாண்டிசேரி ரோடு 16 வருடமாக போடப்படாமல் இருந்து வருகிறது. 4 வழிச் சாலை முடிக்கப்படாமல் ஒரு வழிச்சாலையாக இருக்கிறது. இதையெல்லாம் போடாமல் புதியதாக 8 வழிச் சாலை போடுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அறவழியில் போராடுகிறார்கள். அவர்களிடம் முதல்வர், எம்.எல்.ஏ., ஆட்சியர் யாரும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

முதல்வர் மாதத்திற்கு மூன்று முறை சேலம் வந்து போகிறார். தன் சொந்த மாவட்ட மக்களிடம் இதுபற்றி பேச வேண்டியது தானே.. ஏன் பேசவில்லை?. இது அம்மா ஆட்சி அல்ல,மோடி ஆட்சி. இந்தத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். விமான நிலையம் விரிவாக்கம், 8 வழி சாலை ஆகியவை மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாக இருக்கிறது.

நாங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.தரிசு நிலங்களை எடுக்க வேண்டும். அதை விட்டு முப்போகம் விளைய கூடிய விவசாய நிலங்களை அழிப்பதை  ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக காவல்துறை தற்போது விநோதமான செயலில் ஈடுபடுகிறது. நிலம் இருப்பவர்கள் மட்டுமே போராட வேண்டும். மற்றவர்கள் போராடக் கூடாது. போராடினால் கைது செய்து சிறையில் அடைப்போம் என்று கூறி அச்சுறுத்துகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடக் கூடாது என்று யார் கூறியது. நாங்கள் 16ம் தேதியில் இருந்து கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம். அந்த மக்களை காவல்துறை மிரட்டி பயமுறுத்தியுள்ளது. முதலில் அந்த மக்களை அச்சத்தில் இருந்து மீட்க வேண்டும். மக்களின் கருத்து சுதந்திரத்தை பறித்திருக்கிறார்கள். நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இந்த 8 வழி சாலையை தடுத்து நிறுத்துவோம்'' என்றார்.