`மக்களைக் காக்க வேண்டிய அரசே மரணத்தை விளைவிக்க கூடாது!’ - நடிகர் மயில்சாமி வேதனை

"மக்களுக்கு மரணம் எந்த விதத்திலும் வரலாம். அது மக்களைக் காக்க வேண்டிய  அரசின் மூலம் வரக்கூடாது. எந்த அரசாக இருந்தாலும் மக்களை கண்ணீர் வடிக்க விடக்கூடாது" என நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார். 

மயில்சாமி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபர்வகளை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வேண்டும் என மக்கள் பல நாள்களாகப் போராடி வந்தனர். மக்களின் இந்த பலநாள் போராட்டத்திற்கு கிடைத்த பரிசு மரணம். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்றேன். அவர்களின் வீட்டில் இன்னும் அழுகுரல் சிறிதும் அடங்கவில்லை. உயிரிழந்தவர்களின் தாய், தந்தை மற்றும் உடன்பிறப்புகளின் தவிப்புகளைப் பார்த்து அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை. வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை கைது செய்யும் நிலை இன்னமும் தொடர்கிறது. எந்தநேரம் போலீஸார் வருவார்கள் என்ற கலக்கத்துடனேயே மக்கள் உள்ளனர்.

எங்களின் வாழ்வாதாரம் காக்க நடத்திய போராட்டத்திற்காகத்தான் காவல்துறையின் இத்தனை மிரட்டல்களா? என்ற மக்களின் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதா வளர்த்து கட்டிக்காத்த அ.தி.மு.கவின் தற்போதைய அரசை மக்களே கேள்வி கேட்கும்போது அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அரசிடம் நான் வேண்டிக் கேட்பது என்னவென்றால், எந்த அரசாக இருந்தாலும் மக்களை கண்ணீர் வடிக்க விடக்கூடாது. மக்கள் சந்தோஷமாக, நிம்மதியாக இருந்தால் மட்டுமே அரசும் நன்றாக இருக்கும். மக்களுக்கு மரணம் எந்த விதத்திலும் வரலாம். ஆனால், மக்களை காக்க வேண்டிய ஒரு அரசின் மூலமே அந்த  வரக்கூடாது.

அரசின் மூலம் மக்களுக்கு உதவிகள் மட்டுமே கிடைக்க வேண்டும்.  நடந்தது நடந்ததாக இருந்துவிட்டுப் போகட்டும். இனி இது போல் அசம்பாவிதங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை. உடலிலும் மனதிலும் காயம்பட்டுள்ள  இந்த மக்களை ஆட்சியில் இருப்பவர்கள் நேரில்  சந்திக்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்." என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!