நெல்லையில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்பு உணர்வு ஸ்கேட்டிங்!

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பது தொடர்பாகப் பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. அதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பது தொடர்பாகப் பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. அதை நெல்லை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

விழிப்புஉணர்வு ஸ்கேட்டிங்

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், இது குறித்து பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஸ்கேட்டிங் பேரணியை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய பேரணி, வ.உ.சி மைதானம், முருகன்குறிச்சி, வண்ணார்பேட்டை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்த ஸ்கேட்டிங் பேரணியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ``குழந்தைத் தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்க தமிழக அரசின் சார்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 5,473 குழந்தைகள் மீட்கப்பட்டு, பள்ளியில் சேர்க்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் பராமரிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, 5,408 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு தொழிற்கல்வி கற்று நல்வழிப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். தொழிலாளர்களாக மாறிய குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பயிற்சிமையங்களில் சேர்க்கப்படுகிறார்கள். 

அங்கு அவர்களுக்கு சிறப்பான வகையில், கல்வியுடன் கைத்தொழில்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு பின்னர் முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி உபகரணங்கள், சீருடைகள், மதிய உணவு இவற்றுடன் மாத ஊக்கத் தொகையாக குழந்தைகளின் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ.400 நேரடியாக செலுத்தப்படுகிறது. சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்றவர்களில் 26 பேர் தற்போது கல்லூரியில் மேற்படிப்பு பயிலுவதற்காக ஆண்டுக்கு ரூ.6,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

ஸ்கேட்டிங்

குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். அதனால் எந்த நிறுவனத்திலாவது குழந்தைகள் பணியில் அமர்த்தப்பட்டு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு 50,000 ரூபாய் அபராதத்துடன், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கோட்டாட்சியர் மைதிலி மற்றும் சைல்ட் லைன் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!