வெளியிடப்பட்ட நேரம்: 01:45 (12/06/2018)

கடைசி தொடர்பு:07:43 (12/06/2018)

ரூ.3 கோடியில் சீரமைக்கப்பட்ட தாமரைக்குளம் சீரழிந்தது எப்படி? - நாகை முன்னாள் எம்.எல்.ஏ கேள்வி

Thamarai Kulam

நாகை வெளிப்பாளையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள தாமரைக்குளம் மிகவும் பழைமையானதாகும். மழைநீர் இக்குளத்தில் தேக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதைச் சீரமைத்து, பொதுமக்களின் நடைப்பயிற்சிக்கும், குழந்தைகள் விளையாடி மகிழச் சிறுவர் பூங்காவும், குளத்தில் படகு சவாரி விடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  

தாமரைக்குளம்

இதையடுத்து கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழக சுற்றுலாத்துறை, நாகை நகராட்சி நிதி மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகியவற்றின் பங்களிப்புடன் முதல்கட்டமாக ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி, சுற்றுச் சுவர், தடுப்புச் சுவர், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டன.  அடுத்தகட்டமாக ரூ.60 லட்சம் மதிப்பில் அலங்கார விளக்குகள், வளைவுகள், சிறுவர் பூங்கா, குளத்தின் நடுவே மண்டபம் போன்ற பணிகளும் நடைபெற்றன. பின்னர் குளத்தின் தூய்மையைப் பராமரிக்க லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் மீன் குஞ்சுகளும் விடப்பட்டன.  இவ்வளவு பணிகளும் நடைபெற்ற பின்பு திறப்புவிழா காண இருந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெய்த கன மழையால் குளத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் சிலவன சரிந்து விழுந்தன. இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.  

இதுபற்றி இந்திய தேசிய லீக், தேசிய பொதுச் செயலாளரும், நாகை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீனிடம் பேசியபோது,  ``சுமார் ரூ.3 கோடி வரை மக்கள் வரிப்பணத்தில் சீரமைக்கப்பட்ட தாமரைக்குளத்தின் கட்டுமானப் பணிகள் சரிந்து விழுந்தது. இது தொடர்பாக நகராட்சி இன்ஜினீயர், ஒப்பந்தக்காரர் உள்ளிட்டோர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு விளக்க நோட்டீஸ் கூடக் கொடுக்கப்படவில்லை. பாழடைந்து கிடக்கும் தாமரைக்குளம் சமீப காலமாக சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டது.  எனவே, இடிபாடுகளுக்குக் காரணமான இன்ஜினீயர், ஒப்பந்தக்காரர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடிபாடுகளைச் சீரமைத்து குளத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடவேண்டும்" என்றார்.