வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (12/06/2018)

கடைசி தொடர்பு:11:08 (12/06/2018)

`அவர்கள் கைப்பையை பறிக்க முயலவில்லை' - பெ.மணியரசன் சொல்லும் அதிர்ச்சியூட்டும் தகவல்!

காவிரி, ஈழத்தமிழர், ஸ்டெர்லைட், மீத்தேன், கூடங்குளம் அணு உலை உள்ளிட்ட பிரச்னைகளில் தீவிரமான போராட்டங்களை நடத்திவரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் நேற்று இரவு தஞ்சையில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி   ``இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த மணியரசனை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோதியதால் அவர் நிலைதடுமாறி விழுந்ததாகவும் இதைப் பயன்படுத்தி அவரிடம் இருந்த கைப்பையை பறித்துக் கொண்டு அவர்கள் தப்பித்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்". இதற்கு தமிழ்த் தேசியப் பேரியக்க நிர்வாகிகள் உள்படப் பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். திட்டமிட்ட கொலைவெறித்தாக்குதலை வழிப்பறி எனத் தமிழக அரசும் காவல்துறையும் திசைதிருப்புவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.

பெ மணியரசன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வநாயகம் ``காவிரி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகள் செய்யும் துரோகத்தை மிகவும் துல்லியமாகவும், துணிச்சலாகவும் பெ.மணியரசன் அம்பலப்படுத்தி வருகிறார். குறிப்பாக தற்பொழுது பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் செய்யும் மோசடிகளைக் கடுமையாக கண்டித்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று இரவு தஞ்சையில் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு எங்களது இயக்கத்தைச் சேர்ந்த சீனிவாசனோடு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் மணியரசன்.

வழக்கறிஞர் செல்வநாயகம்மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த சமூக விரோதிகள், கொலைவெறியோடு கீழே தள்ளியிருக்கிறார்கள். இவரது கைப்பையை பறிக்க அவர்கள் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை. சிறிது தூரம் சென்ற அந்தச் சமூக விரோதிகள், தங்களது வாகனத்தைச் சற்று நிறுத்தி, மணியரசன் எந்த நிலையில் இருக்கிறார் எனத் திரும்பி பார்த்திருக்கிறார்கள். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள். 

பலத்த காயமடைந்த மணியரசனை, பதற்றத்தோடு சீனிவாசன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதன்பிறகு தான் கீழே விழுந்த கிடந்த கைப்பையை வேறு யாரோ எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஓடுகிற வாகனத்தில் இருந்து கீழே தள்ளினால், பலத்த காயமடைந்து உயிர்போகும், அப்படியும் இல்லையென்றால், பின்னால் வரக்கூடிய வாகனம் மணியரசன் மீது ஏறி உயிர்போகட்டும் என்ற திட்டத்துடன் கொலைவெறித்தாக்குதல் நடந்துள்ளது.

வழிப்பறிக்காக இந்தத் தாக்குதல் நடந்திருந்தால், அந்தச் சமூக விரோதிகள், மணியரசனிடமிருந்து கைப்பையை பறித்துச் சென்றிருப்பார்கள். ஆனால் அதுபோல் நிகழவில்லை. அவர்கள் வழிப்பறி திருடர்கள் என்றால், நின்று நிதானமாகத் திரும்பி பார்ப்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. தமிழக முதல்வரும் காவல்துறையினரும் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் நேர்மையில்லாமல் நடந்து கொள்கிறார்கள். இதுபோல் வழிப்பறித் தாக்குதல் போல் திசைதிருப்ப பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்தார். உண்மை நிலையை அறிய பெ.மணியரசன் மற்றும் சீனிவாசனிடம் பேசினோம். ‘’அந்தச் சமூக விரோதிகள் கைப்பையை பறிக்க, ஒரு சிறு முயற்சிகூட செய்யவில்லை” என உறுதிப்படத் தெரிவித்தார்கள்.