``எதிர்ப்புகளை அரசியல்வாதியாகவே எதிர்கொள்வேன்" - கமல்ஹாசன் பேச்சு!

2013ல் கமல் இயக்கி, தயாரித்து, நடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. 'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் வெளிவரும்போது பல பிரச்னைகளில் சிக்கியது. பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு படத்தின் காட்சிகள் சில ரத்து செய்யப்பட்டன. ஒரு கட்டத்தில் ``பிரச்னைகள் தொடர்வதால் நான் நாட்டைவிட்டே வெளியேறுவேன்" என்றார். ``நான் அரசியல்வாதி இல்லை சினிமா கலைஞன்" என்றும் கூறியிருந்தார். விஸ்வரூபம் 2 படம் தாமதமாக தயாராகியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர், அண்ணன் மரணம், கௌதமியுடன் பிரிவு என கமலைச் சுற்றி பல விஷயங்கள் மாறியுள்ளது.

கமல்

இதற்கிடையே இன்று நடந்த டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ``முதல் பாகத்துக்கு பல்வேறு அமைப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தாற்போல் இந்த முறையும் எதிர்ப்பு வந்தா எப்படி எதிர்கொள்வீர்கள்?" என்ற கேள்விக்கு...`அந்த மாதிரி எதுவும் வராதுனு நினைக்கிறேன். முதலில் வந்த பிரச்னை வேற. ஒரு பெயரில் உருவம் மாற்றி மாறுவேடத்தில் வந்த எதிர்ப்புகள் தான். அந்த எதிர்ப்பு பிற்பாடு அவர்களிடமிருந்து வரவில்லை. இப்போதும் அப்படித்தான். அது அரசியல். இதிலும் அரசியல் வந்தால், எதிர்கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்திருக்கிறேன். அரசியல்வாதியாக வரும் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு நான் தயாராக உள்ளேன். இது, `விஸ்வரூபம்' முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மட்டும் இருக்காது. முன்கதையும் இந்தப் படத்தில் இருக்கிறது. யார் இந்த விஸாம் அஹமது காஷ்மீரி என்பதை விளக்கும் கதையாகவும் இந்தப் படம் இருக்கிறது." என்று முடித்தார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!