மூன்று முறை தடையான முதல்வர் விழா இம்முறையாவது நடக்குமா? - ஐ.ஜி ஆய்வு

Chief Minister Palanisamy

காவிரி வாரியம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தஞ்சையில் விவசாய சங்க பிரமுகர்களை வைத்து பொதுக்கூட்டம் நடத்தி  `பொன்னியின் செல்வி’ என்ற பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். அதுபோல் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார். 

ஐ ஜி ஆய்வு

இதற்காக கடந்த மே மாதம் 26-ம் தேதி மயிலாடுதுறையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவு பெற்றுத் தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்தப்படுமென கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் அறிவித்தார்.  அப்போது,  ``இனி யாரிடமும் காவிரியில் நீர் கேட்டுப் போராடவேண்டிய அவசியமில்லை. அந்தந்த மாதத்துக்குரிய தண்ணீர் தானாகவே வந்துவிடும்’ என்றும் கூறினார்.  அமைச்சர் கூற்றுப்படி நடந்திருந்தால் தற்போது ஜுன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் இருப்பார்கள். அப்படி ஏதும் நடக்க வாய்ப்பில்லை என்று முதல்வரே அறிவித்துவிட்டார்.  

இதற்கிடையே, தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து தமிழகமெங்கும் பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்ட காரணத்தால் கடந்த மே மாதம் 26-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் மயிலாடுதுறை பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.  அடுத்ததாக அக்கூட்டம் கடந்த ஜூன் 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  சட்டசபை கூட்டத் தொடர் காரணமாக அதுவும் ஒத்திவைக்கப்பட்டது.  இறுதியாக எதிர்வரும் ஜுன் 17-ம் தேதி நடைபெறும் என அறிவித்தார்கள்.  அதிலும் திருத்தமாக ஜுன் 18-ம் தேதி முதல்வர் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள்.  

இச்சூழ்நிலையில், மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் தமிழக முதல்வர் கலந்துகொள்ளும் கூட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜிலு, தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன், நாகை எஸ்.பி. சஞ்சை சேகர் தேஷ்முக் ஆகியோர் நேரில் இன்று வந்து ஆய்வு செய்தனர்.  அதன்பின், மயிலாடுதுறை நகர்ப் பகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை கண்காணிப்பதற்காக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி. வரதராஜிலு திறந்து வைத்தார்.  அப்போது பேசிய நாகை எஸ்.பி. சஞ்சை சேகர் தேஷ்முக்,  ``சாலைப் பாதுகாப்புக்காக மயிலாடுதுறையில் 74 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  அனைத்தும் உயர் ரக பைபர் கேபிள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.  இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அவர்கள் அறையில் அமர்ந்த நிலையில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள். முதல்வர் கலந்துகொள்ளும் விழா வெகு பாதுகாப்பாக நடைபெறும்" எனத் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!