தமிழகத்தில் ராஜபக்சேவின் ஏஜென்டுகள் யார்? பொன்.ராதாகிருஷ்ணன் திடுக் குற்றச்சாட்டு!

மிழகத்தில் ராஜபக்சேவின் ஏஜென்டுகளாகச் செயல்படுபவர்கள் யார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சூசகமான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ``நான்காண்டுகளாக மோடி அரசு செய்துள்ள சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என அமைச்சர்களையும், எம்.பி-க்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். மோடி ஆட்சிக்கு வந்தபிறகு, இந்தியாவில் 32 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்டாண்ட் அப் இந்தியா மூலம் 10 லட்சம் முதல் 1 கோடி வரை கடன் கொடுக்கும் திட்டத்தில், 60,301 பேருக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கி திட்டத்தில் 5 கோடி 78 லட்சத்து 3 ஆயிரத்து 831 கணக்குகளுக்கு 3,85,104 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மின்சாரத்தில் மிகப்பெரிய புரட்சியை அரசு ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய அளவில் 68 லட்சத்து 24 ஆயிரத்து 83 வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்ட ரயில்வேயை மதுரை கோட்டத்தில் இணைக்க முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. அந்த்யோதயா ரயிலை குமரி மாவட்டத்தில் விடுவதற்கு டிராக் போதாது என்கிறார்கள். இரட்டை ரயில் பாதை பணிகளும் வேகமாக நடந்துவருகிறது. கன்னியாகுமரியில் துறைமுகம் வரும். துறைமுகம் அமைக்கும்போது குமரி மாவட்ட இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். நமக்கு துறைமுகம் அமைந்தால் இலங்கை துறைமுகம் பாதிக்கும். எனவே,  துறைமுகத்தை எதிர்த்து ராஜபக்சேவின் ஏஜென்டுகளாகச் சிலர் செயல்படுகிறார்கள். யார் எம்.பி-க்களை அழைத்துச் சென்று ராஜபக்சேவை சந்திக்க ஏற்பாடு செய்தார்களோ, யார் ஒன்றரைலட்சம் தமிழர்களைக் கொன்று தமிழினத்திற்கு துரோகம் செய்தார்களோ, அவர்கள்தான் ராஜபக்சேவின் ஏஜென்டுகள். எத்தனை தொழிற்சாலைகள் தமிழகத்துக்கு வரவேண்டியது வேறு மாநிலங்களுக்குச் சென்றன. நான் பொறுப்போடு, ஆதாரத்துடந்தான் இதைப் பேசுகிறேன். தி.மு.க ஏன் தொழிற்சாலைகள் போனதுபற்றிப் பேசவில்லை? தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் உறவு வைத்துள்ளன. இந்தியா அதிக விபத்து நடக்கும் நாடு. அதிலும் அதிக விபத்து மரணங்கள் நடப்பது தமிழகத்தில். இங்கு சாலை விரிவாக்கம் செய்யக்கூடாது என்று போராடுகிறார்கள். ஒட்டுமொத்த சதியின் விளைவுதான் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள். தமிழகத்தில் வளர்ச்சி இல்லாத நிலையைக் கொண்டுவர புரட்சி ஏற்படுத்துகிறார்கள். பயங்கரவாதிகளுக்குத் துணையாக அன்னிய நாட்டு சக்திகள் செயல்படுகின்றன. நான் ஒன்றரை ஆண்டுகளாகப் பேசிவருவதைத்தான் தூத்துக்குடியில் ரஜினி கூறினார். 

பொன் ராதாகிருஷ்ணன்

தேசியக் கொடியை எரிப்பது, காவல்துறையினரை அடிப்பது போன்றவற்றைச் செயல்படுத்தி, சமூக ஊடகங்களில் பகிர்கிறார்கள். தமிழகத்தில் கைதுசெய்யப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர்கூட மாநில அரசால் கைதுசெய்யப்படவில்லை. மத்திய அரசுதான் கைது செய்துள்ளது. அயல்நாடுகளுக்குத் துணைபோகும் இயக்கங்கள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. இளைஞர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். தூத்துக்குடியில் இறந்தவர்களில் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்தால் அரசு வழங்கிய ரூ.20 லட்சத்தின் நிலை என்ன?. அவர்களுக்குப் பணம் உண்டு என்றால் சுட்டுக்கொன்றது தவறு. காவல்துறைமீது மரண தண்டனை வழக்குத் தொடருமா என்பதுபோன்ற 12 கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். அதற்கு இதுவரை பதில் இல்லை. ரஜினி இதுவரை அரசியலுக்கு வரவில்லை. மன்றத்தை வலுப்படுத்துகிறார். 'காலா' திரைப்படத்துக்கு பூத் அளவில் ஆள் தேவைப்படுவதால், பூத் கமிட்டி போட்டுள்ளார்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!