`அஷ்வினிடம் கற்ற பாடத்தைக்கொண்டு இந்தியாவுக்கு நெருக்கடி' - ஆஃப்கன் வீரர் முஜீப்! 

'அஷ்வினிடம் கற்றுக்கொண்ட பாடத்தை இந்திய டெஸ்டில் பயன்படுத்தி நெருக்கடி அளிப்பேன், என ஆஃப்கானிஸ்தான் இளம் சுழற்பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

முஜீப்

photo credit:@lionsdenkxip

வரலாற்றுச் சிறப்பு மிக்க தனது முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவை எதிர்த்துக் களமிறங்க உள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி. நாளை மறுதினம், இப்போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, இரண்டு அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. காயம் காரணமாக கோலி பங்கேற்காததால், அவருக்குப் பதிலாக அஜிங்கியா ரஹானே தலைமையில், இந்திய அணி பங்கேற்க உள்ளது. அதேபோல, அஷ்கர் ஸ்டானிக்சய்  தலைமையில் களமிறங்க உள்ள ஆஃப்கன் அணியில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், அமீர் ஹம்சா என இளம் சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். இதற்கிடையே, முஜீப் உர் ரஹ்மான் சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்தனர். அப்போது, பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வினின் நன்மதிப்பைப் பெற்ற முஜீப் தனது திறமையை நிரூபித்தார். 

இந்நிலையில், இந்திய டெஸ்ட் குறித்து முஜீப் கூறுகையில்,  ``பஞ்சாப் அணிக்காக விளையாடும்போது அஷ்வினுடன் நிறைய நேரம் செலவிட்டேன். அப்போது, அவர் எனக்கு சொல்லிய அறிவுரைகள் மிகவும் உதவியாக  இருந்தது. எந்த இடத்தில் பந்து வீசி பேட்ஸ்மேனுக்கு நெருக்கடிகொடுப்பது, புதிய பந்தை எவ்வாறு சுழலவைப்பது போன்ற நுணுக்கமான விஷயங்கள் அவரிடம் கற்றுக்கொண்டேன். குறிப்பாக கேரம் பால் வீசுவதை அவரிடமிருந்து தெளிவாகக் கற்றுக்கொண்டேன். அஷ்வினிடம் கற்றுக்கொண்ட பாடத்தை இந்திய டெஸ்ட்டில் வீசி நெருக்கடி அளிப்பேன். நான் முதல்தர போட்டிகளில் விளையாடாவிட்டாலும், பயமின்றி விளையாடுவேன். ஐபிஎல் ஆட்டம் எனக்கு பயத்தைப் போக்கக் கற்றுக்கொடுத்துள்ளது. இதற்காக, ஐபிஎல்-லுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!