வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (12/06/2018)

கடைசி தொடர்பு:10:53 (12/06/2018)

பட்டியல்நீக்கம் செய்யப்படும் சேனல்கள்! ஊடக சுதந்திரத்தைப் பறிக்கிறதா தமிழக அரசு?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் ஆட்சிசெய்வதாகக் கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், அதே ஜெயலலிதாவின் பாணியில் செய்தி ஊடகத்தினருக்கு அரசமைப்புக்கு விரோதமாக நெருக்கடி அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு தொலைக்காட்சி கேபிள் தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனல்கள் நீக்கப்படுவது தொடர்கதை ஆகியுள்ளது. 

கடந்த வாரம் கோவையில் நடந்த 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் விவாத நிகழ்வில் பா.ஜ.க-வினர் பிரச்னை செய்ததையடுத்து, அந்த நிகழ்வு பாதியில் முடிக்கப்பட்டது. அதையொட்டி கருத்துக்கூற முயன்ற இயக்குநர் அமீரைத் தாக்கமுயன்றவர்களை விட்டுவிட்டு, அமீர் மீதும் அந்த உரையாடலுக்குப் பொறுப்பான செய்தி ஊடகத்தினர் மீதும் புதிய தலைமுறை நிர்வாகிகள் மீதும் அரசு வழக்கு பதிந்துள்ளது. இதைக் கடுமையாகக் கண்டித்துள்ள அரசியல் கட்சிகள், அரசின் நடவடிக்கை கருத்துசுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் குறிப்பிட்டுள்ளன.

அரசு கேபிள்

சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (எம்.யு.ஜெ.) உட்பட பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள், கருத்துசுதந்திரத்தின் மீது அரசு கைவைப்பதாகவும் இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், அரசு கேபிளில் டிஜிட்டல் தொகுப்பில் 124-ம் இடத்திலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியை 499-ம் இடத்துக்கு அரசு மாற்றியுள்ளது. 

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் காவேரி தொலைக்காட்சிதான், இப்படியான பிரச்னையை முதலில் எதிர்கொண்டது. புதிய தொலைக்காட்சியாக இருந்தாலும், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்புவரை அரசு கேபிள் வலைப்பின்னலில் இந்த தொலைக்காட்சி இடம்பெற்றிருந்தது. சாதாரண அனலாக் முறையில் மட்டுமல்ல, டிஜிட்டல் வடிவிலும் காவேரி தொலைக்காட்சியைப் பார்க்கமுடிந்தது. இடைத்தேர்தலையொட்டி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை வழங்கிவந்த அந்த ஊடகம், தினகரனின் வெற்றி குறித்து சிறப்புச்செய்தி ஒன்றை வெளியிட்டது. அதற்கு அ.தி.மு.க சார்பாளர்கள் அதிருப்தி வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து அரசு கேபிளில் டிஜிட்டல் தொகுப்பிலிருந்து காவேரி நீக்கப்பட்டது. 

puthiyathalaimurai

அதையடுத்து, கடந்த மாதம் ம.தி.மு.க-வினரால் நடத்தப்படும் ’மதிமுகம்’ தொலைக்காட்சியும், அரசு கேபிள் டிஜிட்டல் தொகுப்பிலிருந்து திடீரென நீக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மதிமுகம் தொலைக்காட்சியானது, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் வேண்டுகோளைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆமோதிப்புடன் கடந்த ஆண்டு அரசு கேபிளில் இணைக்கப்பட்டது. பொது மற்றும் பொழுதுபோக்கு அலைவரிசை வரிசையில், மதிமுகம் தொலைக்காட்சியானது 155-ம் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.  கடந்த மாதக் கடைசிவரை அரசு கேபிளில் எந்தத்தடையுமின்றி இயங்கிவந்த மதிமுகம் தொலைக்காட்சி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்துக்குப் பிறகு அது பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதையடுத்து கடந்த மாதம் 29-ம் தேதி இரவு 11.30 மணிமுதல் திடீரென அரசு கேபிள் டிஜிட்டல் தொகுப்பிலிருந்து நீக்கப்பட்டது. அரசு கேபிள் நிறுவனத்தின் புதிய அதிகாரி ஜான் லூயிஸிடம் மதிமுகம் நிர்வாகத்தின் சார்பில் முறையிடப்பட்டும், ஒரு பலனும் இல்லை என்கிறார்கள் மதிமுகம் தொலைக்காட்சி தரப்பில்! 

அதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இது குறித்து மதிமுகம் தொலைக்காட்சி தரப்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். இரண்டு வாரங்களாக இதே நிலைதான் நீடிக்கிறது. இந்த விவகாரம் குறித்து சென்னையில் இன்று நடைபெற்ற ம.தி.மு.க உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், அடுத்தடுத்து மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பை அரசுசார் கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் முயற்சியே இது என்று கருத்துசுதந்திர ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். 


டிரெண்டிங் @ விகடன்