வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (12/06/2018)

கடைசி தொடர்பு:10:11 (12/06/2018)

48 நிமிடங்கள் நடைபெற்ற ட்ரம்ப், கிம் சந்திப்பு

உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு, இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது. 

ட்ரம்ப்

உலக நாடுகள் விதித்த பொருளாதாரத் தடையினால், அணுஆயுதச் சோதனையைக் கைவிட்ட வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைச் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.  அதைத் தொடர்ந்து, இன்று காலை சிங்கப்பூரில் இரு நாட்டுத் தலைவர்களின் ஆலோசனை நடைபெற்றது. வட கொரியா உருவான பின், அமெரிக்க அதிபர் மற்றும் வடகொரிய அதிபர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். நீண்ட நாள்களாக உலக நாடுகளின் மொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த இரு தலைவர்களின் சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள செண்டோசா தீவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.  இந்திய நேரப்படி 6:30 மணிக்குத் தொடங்கிய இவர்களின் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை சுமார் 48 நிமிடங்கள் நடைபெற்றது.  

இவர்களின் சந்திப்புக்குப் பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபருடனான பேச்சுவார்த்தை மிக சிறப்பாக அமைந்ததாகவும், இதனால் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வுகாணப்படும் எனவும் கூறியுள்ளார்.  இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் நடுவில் இந்த இரு தலைவர்களும் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

பின்னர், இரு நாட்டுத் தலைவர்களும் தங்களின் அதிகாரிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதில், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மிக முக்கிய பிரச்னையான அணுஆயுத சோதனை, பொருளாதாரத் தடை ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.