வெளியிடப்பட்ட நேரம்: 09:41 (12/06/2018)

கடைசி தொடர்பு:10:30 (12/06/2018)

எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் - படையெடுக்கும் தலைவர்கள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பல்வேறு தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றனர்.

வாஜ்பாய்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். இவர் நேற்று வழக்கமான பரிசோதனைக்கான டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் வாஜ்பாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், வாஜ்பாய் சிறுநீரக தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார், அனைத்து சோதனைகளும் நிறைவடைந்து அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், வாஜ்பாய் அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க-வின் மூத்த தலைவர் அத்வானி போன்ற முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். 

வாஜ்பாயை பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க  எம்.பி விஜய் கோயல், `` வாஜ்பாய்க்கு சிறுநீரகத் தொற்று உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார், அவர் விரைவில் குணமடைவார்” என நம்பிக்கை தெரிவித்தார்.