கொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருவிழா

ஆண்டுக்கு இரு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடப்பது வழக்கும். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசன திரு விழாவும் நடைப்பெறும்.

சிதம்பரத்தில் உலகப் பிரசித்திபெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுக்கு இரு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடப்பது வழக்கும்.

மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன தரிசனத்  திருவிழாவும் நடைபெறும். ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனத் திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதன்பிறகு, பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாரதனை செய்யப்பட்டு, வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்களும் சிவனடியார்களும் கலந்துகொண்டு ஸ்ரீ நடராஜப் பெருமானையும், சிவகாம சுந்தரியையும் வழிபட்டனர்.

இரவு, தங்கம், வெள்ளி மஞ்சங்களில் பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா நடைபெறும். வரும் 19-ம் தேதி வரை  பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற உள்ளது. இதன் முக்கிய திருவிழாவாக, வரும் 20-ம் தேதி தேர்த் திருவிழா நடக்கிறது.  அன்று காலை 5.30 மணிக்கு மேல் மூலவரான  ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமான் தேரில் எழுந்தருள்கின்றனர். இதைத் தொடர்ந்து, தனித்தனி தேர்களில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தேரோடும் வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். 21-ம் தேதி அதிகாலை, கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில், சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு மகா அபிஷேகமும், மதியம் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெறும். 22-ம் தேதி இரவு, முத்துப் பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளின் வீதியுலா நடைபெறும். திருவிழாவையொட்டி சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.  விழாவுக்கான ஏற்பாடுகளைக் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் நடேஸ்வர தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் செய்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!