``நாங்கள் கோமாளி அரசாங்கம் நடத்தவில்லை” கிரண்பேடியைச் சாடும் நாராயணசாமி

``நாங்கள் கோமாளி அரசாங்கம் நடத்தவில்லை” என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கடுமையாகச் சாடியிருக்கிறார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

நாராயணசாமி

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “இணைச் செயலாளர்களை நேரடியாக நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு ஒரு உத்தரவை வெளியிட்டிருக்கிறது. இது, மாநில நிர்வாகத்தைச் சீரழிக்கும் செயல். அரசு அதிகாரிகளின் பாரம்பர்யத்தை ஒழித்துக்கட்டும் வகையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரத்தைத் தொடர்ந்து தங்கள் கைகளில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் மோடி அரசு, வெளி மார்க்கெட்டிலிருந்து அதிகாரிகளைத் தேர்வுசெய்யும் முறையாக இது இருக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த உத்தரவு ஐஏஎஸ் போன்ற அமைப்புகளை வலுவிழக்கச் செய்வதோடு, அதன் மரியாதையையும் குறைக்கும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தகவல் தொடர்பு அமைப்புகளால் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, தகவல் தெரிவிப்பது கூடாது என்று அமைச்சரவை முடிவெடுத்திருக்கிறது. வாட்ஸ்அப் என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்டது அல்ல. அதனால், அதில் வரும் உத்தரவுகளை ஏற்று நடக்கக் கூடாது என தலைமைச்செயலாளர் உள்ளிட்ட அனைத்து செயலாளர்களுக்கும் நிலையாணை அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் கிரண்பேடிக்கும் அது அனுப்பப்பட்டது.

நாராயணசாமி

 அதன்பிறகும், ”பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கும் புகார்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருக்கிறார், கிரண்பேடி. இதன்மூலம், அவருக்கு நிர்வாகம் தெரியாது என்பதை நிரூபித்துள்ளார். பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட செயலருக்கும், அமைச்சருக்கும் அனுப்பிவைத்து, முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று, அதன்பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அதை மீறி வாட்ஸ்அப்பில் உத்தரவு போடுவது என்பது புதுச்சேரி அரசு நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒன்று. அதனால், விதிகளை மீறுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாட்ஸ்அப்பில் புகார் வந்தால், அதைக் கண்டுபிடிக்க முடியாது. யாரைப்பற்றி வேண்டுமானாலும் உண்மைக்குப் புறம்பாக எழுதி, அவர்களைப் பழிவாங்கும் செயலை வாட்ஸ்அப் மூலம் செய்ய முடியும். நூற்றுக்கு 70 சதவிகித வாட்ஸ்அப் தகவல்கள் தவறானவைதான். அதனால், அவற்றை வைத்து நடவடிக்கைகள் எடுக்க முடியுமா? திருபுவனையில் உள்ள வங்கியில் 3 கோடி ரூபாய் கொள்ளை என்று தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. ஆனால், அங்கு நடந்தது வெறும் கொள்ளை முயற்சிதான். வாட்ஸ்அப்பின் சர்வர் அமெரிக்காவில் இருக்கிறது. அதில் புகார் வந்தால், நான் அமெரிக்காவா செல்ல முடியும்? நாங்கள் ஒன்றும் கோமாளி அரசாங்கம் நடத்தவில்லை” என்றார் ஆவேசமாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!