தோட்டத்துக்குச் சென்றவருக்கு மக்னா யானையால் நடந்த கொடூரம்! | elephant killed a man who is going to garden by evening

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (12/06/2018)

கடைசி தொடர்பு:10:54 (12/06/2018)

தோட்டத்துக்குச் சென்றவருக்கு மக்னா யானையால் நடந்த கொடூரம்!

தேனி மாவட்டம், தேவாரம் அருகே தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவரை யானை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

யானை தாக்கி பலியான விவசாயி

தேவாரம் சாலைத் தெருவைச் சேர்ந்த ராஜ் என்பவரது மகன் சேகர்.  நேற்று இரவு தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் இவர் காலை வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர்,  தோட்டத்துக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கே சேகர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் யானை தாக்கி சேகர் பலியானது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கடந்த பல மாதங்களாக மக்னா என்ற ஒற்றை யானை தேவாரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித் திரிந்துவருகிறது. விளை நிலங்களை சேதம் செய்வதாகவும். அதை காட்டுக்குள் விரட்ட வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த வாரம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர். ஆனால், இன்று வரை மக்னா யானையை காட்டுக்குள் விரட்டும் எந்த நடவடிக்கையையும் வனத்துறை செய்யவில்லை எனவும், மாலை நேரத்துக்குப் பிறகு தோட்டத்துக்குச் செல்லவே பயமாக இருப்பதாகவும் தேவாரம் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.