வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (12/06/2018)

கடைசி தொடர்பு:11:19 (12/06/2018)

`கல்வித்துறையிலும் தனியார்மயமா?' - கொதிக்கும் கல்வியாளர்கள்

`அரசு நிறுவனங்களில், அனுபவம் மற்றும் திறமை வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், கல்வி நிறுவனங்களையும் சேர்க்க வேண்டும்' என மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங்கின் பேச்சுக்கு எதிராகக் கொந்தளிக்கின்றனர் கல்வியாளர்கள். 

சத்யபால் சிங்  கல்வித்துறை

அரசுத் துறைகளில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், லேட்ரல் என்ட்ரி முறையை நிதி ஆயோக்கிடம் பரிந்துரைத்துள்ளது மத்திய அரசு. இதன்படி நிதி, பொருளாதாரம், போக்குவரத்து, விவசாயம், விவசாயிகளின் நலன்,  பாதுகாப்புத் துறை, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட பத்து பொதுத்துறை நிறுவனங்களில் இணைச் செயலாளர் பதவிக்கு, அனுபவம் மற்றும் திறமைமிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம்' என மத்திய அரசு விளம்பரம் வெளியிட்டுள்ளது.  ' இந்தப் பணிகளுக்குத் தனியார் துறைகளில் பணியாற்றிவர்கள் விண்ணப்பிக்கலாம்' எனவும் அந்த விளம்பரம் தெரிவிக்கிறது. 

மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், 'அரசின் கல்வித்துறையிலும் இதேபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார், மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 'தனியார் துறைகளில் பணியாற்றிய திறமைவாய்ந்த வல்லுநர்களை, அரசுத் துறைகளில் பணியமர்த்த மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதேபோல, அரசின் கல்வி நிறுவனங்களிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும். அரசு கல்வி நிறுவனங்களுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் நீண்டகாலமாக ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.  இதைச் சீர்செய்ய, இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இதன்மூலம், கல்வித் தரத்தை மேம்படுத்த முடியும். இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன்' என்றார். 

பிரபா கவிமணி கல்வித்துறைசத்யபால் சிங்கின் பேச்சுகுறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர் பிரபா.கல்விமணி, "மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சரின் நடவடிக்கை ஏற்புடையதாக இல்லை. மத்திய அரசின் திட்டத்தை, கல்வித்துறையிலும் செயல்படுத்த முயற்சிப்பது சரியான நடவடிக்கை அல்ல. தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்ததன் விளைவாக, அரசுக் கல்வி நிறுவனங்களின் தரம் முற்றிலுமாகக் குறைந்துவிட்டது. நீட் நுழைவுத்தேர்வுமூலம் மட்டும்தான் மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையால், தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தனியார் கல்வி நிறுவனங்களில் கல்லூரி முதல்வர்கள், டீன் போன்ற முக்கியப் பொறுப்பில் பணியாற்றியவர்களை நேரடியாக அரசுத் துறைக்குள் கொண்டு வந்துவிட்டால், இத்தனை காலம் அந்தப் பதவிகளில் பணியாற்றிய இணைச் செயலாளர்கள் தகுதியில்லாதவர்களா... தனியார் துறையில் பணியாற்றியவர்களைத் தற்போது நியமிக்கக் காரணம் என்ன? அரசுத் துறைகளில் தங்களுக்கு வேண்டியவர்களை மறைமுகமாகக் கொண்டுவருவதன் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்கவேண்டியுள்ளது" என்றார் கொதிப்புடன்.