வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (12/06/2018)

கடைசி தொடர்பு:12:40 (12/06/2018)

`இப்படியும் வீரர்களுக்கு உணவு தருகிறார்கள்' - கலங்கடித்த இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளரின் கடிதம்

`இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக உள்ளது' என அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். 

ஹாக்கி

பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு பயிற்சி மையத்தில் 'சாம்பியன் டிராபி' போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்திய ஹாக்கி அணி வீரர்கள். இந்த பயிற்சி மையத்தில் வழங்கப்படும் உணவுகள் குறித்து, இந்திய ஹாக்கி நிர்வாகத் தலைவர் ராஜிந்தர் சிங்குக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் ஹரேந்திர சிங். அந்தக் கடிதத்தில், 'ஆசிய விளையாட்டு போட்டிக்காகவும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காகவும் ஹாக்கி அணியின் ஆண்கள் பிரிவு வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில், விளையாட்டு வீரர்களுக்காகத் தயாரிக்கப்படும் உணவுகள் மிகவும் தரமற்றதாக உள்ளது. உணவுகளில் ஊட்டச்சத்து குறைவாக வழங்கப்படுகிறது. 

சமீபத்தில் வீரர்களுக்கு ரத்தமாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதில், வைட்டமின்கள் மற்றும் உணவு தொடர்பான குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. வீரர்களுக்கு வழங்கப்படும் அசைவ உணவுகளில் இறைச்சிக்கு பதிலாக அதிகப்படியான எலும்புகள் தரப்படுகின்றன. இதனால், வீரர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், சமைக்கப்படும் உணவுகளில் பூச்சி, முடிகள் இருக்கின்றன' எனக் குறிப்பிட்டுள்ளார். ஹாக்கி அணி பயிற்சியாளரின் இந்தக் கடிதம், இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தை அதிர வைத்துள்ளது.