வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (12/06/2018)

கடைசி தொடர்பு:12:39 (12/06/2018)

`திருடிய வீட்டிலேயே நகையை வைத்துவிடு’ - பட்டதாரி கணவருக்கு புத்திமதி கூறிய மனைவி

சவரன்

வேலை கிடைக்காத விரக்தியால் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் பன்னிரண்டரை சவரன் நகைகளைத் திருடியுள்ளார். அவரை ஆறு மணி நேரத்தில் போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை திரு.வி.க நகர் பிரபு தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர், குடும்பத்துடன் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, பீரோ திறந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பீரோவில் வைத்திருந்த பன்னிரண்டரை சவரன் நகை திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அறிவழகன், திரு.வி.க.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமணி, சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தார். அப்போது, பீரோவில் இருந்த 70,000 ரூபாய் திருடப்படவில்லை. இதனால், அறிவழகனுக்குத் தெரிந்தவர்கள் மட்டுமே இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் கருதினர். இதையடுத்து, அறிவழகனுக்குச் சொந்தமான வீடுகளில் வாடகைக்கு இருப்பவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த இளமதி என்பவர் மட்டும் மாயமாகியிருந்தார். அவர், வீட்டுக்குத் திரும்பியதும் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். முதலில் திருடவில்லை என்று தெரிவித்த இளமதியிடம் போலீஸார் கிடுக்குப்பிடி கேள்விகளைக் கேட்டனர். அப்போது, நகைகளைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இளமதி, எம்.பி.ஏ படித்துவிட்டு வேலை தேடிவருகிறார். இதனால், இவரின் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. மாதம் 4,000 ரூபாய் வாடகைக்கு அறிவழகன் வீட்டில் மூன்று மாதங்களுக்கு முன்பு குடிவந்தார். அறிவழகன் வசதியாக இருப்பதைப் பார்த்த இளமதி, அவரின் வீட்டில் திருடத் திட்டமிட்டிருக்கிறார். வீட்டில் யாருமில்லாத சமயத்தில் நகைகளைத் திருடிய இளமதி, அதை மனைவியிடம் கொடுத்துள்ளார். அதை வாங்காமல் கணவரைத் திட்டியதோடு, எடுத்த இடத்தில் நகைகளை வைக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். அதனால், நகைகளை பீரோவில் வைக்க இளமதி செல்வதற்குள் அறிவழகன் வந்துவிட்டார். அதனால், நகைகளை உறவினர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு இளமதி வீட்டுக்கு வந்துள்ளார். அவர் மீதான சந்தேகத்தின் அடிப்படையில் இளமதியிடம் விசாரித்தோம். புகார் கொடுத்த ஆறு மணி நேரத்தில் இளமதியைக் கைதுசெய்து, நகைகளை மீட்டுள்ளோம்" என்றனர்.