வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (12/06/2018)

கடைசி தொடர்பு:13:21 (12/06/2018)

ஊட்டி டு சென்னை வரை நின்றுகொண்டே பைக் பயணம் செய்யும் சைபி மேத்யூ!

என் பையன் கொடுத்த ஐடியாதான் நின்னுகிட்டே பைக் ரைட் பண்றது.

ஊட்டி டு சென்னை வரை நின்றுகொண்டே பைக் பயணம் செய்யும் சைபி மேத்யூ!

``இயற்கை மீதான அக்கறை மக்களிடையே அதிகரித்துவருகிறது. சுற்றுச்சூழல் குறித்து மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டு வருகிறது. இப்போது இயற்கையை அழித்தால், பின்னாளில் உயிர்வாழ முடியாது என்கிற நிலை உண்டாகி வருகிறது. அதனால், இயற்கையைக் காக்க போராடுகிறார்கள். ஆனால், பெண்களை? இன்றும் பல வீடுகளில் பெண்கள் அடிமைகளாக, கணவன்மார்களின் பேச்சுக்கு மாற்றுக் கருத்து தெரிக்கவே அஞ்சுபவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எதிர்த்துப் பேசினால் அடி நிச்சயம். இயற்கையை அழித்தால் நாளை வாழமுடியாது என்று நினைக்கும் ஆண்கள், பெண்களை அடிமைப்படுத்தி அழித்தால் நாளை எப்படி வாழ்வது என என்றாவது நினைத்ததுண்டா? பெண்கள் கோழைகள், தைரியம் இல்லாதவர்கள் என்று சொல்வதற்கு எதிராக, தமிழகம் முழுவதும் பைக்கில் நின்றபடியே சுற்றிவருகிறேன்" என்று அழுத்தமாகப் பேசுகிறார் சைபி மேத்யூ.

ஊட்டியிலிருந்து சென்னை வரை பெண்கள் விழிப்பு உணர்வு சார்ந்த பைக் பயணம் அது. மொத்தம் 3,000 கிலோமீட்டர். எட்டு நாள் பைக் பயணம். அதுவும் நின்றுகொண்டே. கேட்கும்போதே பிரமிப்பும் ஆர்வமும் உண்டாகிறதல்லவா? எப்படி உண்டானது இவரின் பைக் பயணம் எண்ணம்?

பைக் ரைடர்

``சின்ன வயதிலிருந்தே பைக் மீது ஆசை. ஆனால், பெண் பிள்ளைக்கு எதுக்கு பைக் என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள். நான் பிறந்து வளர்ந்தது கேரளாவில். என் கணவர் ஊட்டி அருகே உள்ள கூடலூரைச் சேர்ந்தவர். அதனால், கூடலூரில் செட்டில் ஆகிவிட்டேன். என் கணவர் விவசாயம் பார்க்கிறார். அடிப்படையில் நானும் ஒரு விவசாயி. எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் இன்ஜினீயரிங் படிக்கிறான். அவனுக்கு பைக் வாங்கிக்கொடுக்கும்போது மீண்டும் பைக் ஆசை வந்தது. அதை அவனிடம் சொன்னேன். என் பையன்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தான். பைக் ஓட்டும் ஆசை, அடிக்கடி குடும்பத்துடன் லாங் டிரைவ் போகவைத்தது. அப்போதுதான் பைக் ரைட் மூலம் விழிப்பு உணர்வு பண்ணலாமே என்ற ஐடியா வந்தது. ஊட்டியிலிருந்து அவினாசி வரை 250 கிலோமீட்டர் பைக் ரைட் பண்ண திட்டமிட்டோம். எல்லோரும்தான் விழிப்பு உணர்வு செய்றாங்க. அதில், நாம கொஞ்சம் வித்தியாசமா செய்யலாமே என நினைச்சப்போ, என் பையன் கொடுத்த ஐடியாதான் நின்னுகிட்டே பைக் ரைட் பண்றது. அந்த 250 கிலோமீட்டரும் நின்னுகிட்டே பைக் ரைட் பண்ணினேன். அதற்கு வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. லிம்கா சாதனையில் இடம்பிடிச்சேன். இது போன வருடம் நடந்தது. இப்போ 3,000 கிலோமீட்டர், எட்டு நாளில் தமிழகத்தைச் சுத்தணும். அந்தப் பயணத்தில் இருக்கிறேன். வருகிற 13-ம் தேதி, என்னுடைய பயணத்தை சென்னையில் நிறைவு செய்கிறேன். ஊட்டியில ஆரம்பிச்சது என் பயணம். இரவு நேரங்கள்ல எந்த ஊரை கிராஸ் பண்றேனோ அந்த ஊர்ல தங்கிப்பேன். பொண்ணுங்கிறதுனால பயப்படலை. மக்களும் என்னை அத்தனை பெருமையோட ஒவ்வொரு ஊர்லேயும் வரவேற்றாங்க. என்னோட நின்றுகொண்டே பயணிக்கும் சாதனையை 'பெஸ்ட் புக் ஆஃப் ரெக்கார்டு' பதிவுசெய்கிறார்கள். பெண்களால் எதுவும் சாத்தியம். எதையும் சாதிக்க முடியும்" என்கிற சைபி மேத்யூ குரலில் கம்பீரம், முகத்தில் புன்னகை. 

பாம்பன் பாலத்தில்....

இவரது அடுத்த இலக்கு? ``சமூகச் சிந்தனைகொண்ட பெண்களை ஒருங்கிணைத்து ஒரு விழிப்பு உணர்வு இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது பல வருட கனவு. அதன்மூலம், பெண்களின் சுயமுன்னேற்றம் குறித்த விழிப்பு உணர்வையும் வழிகாட்டுதலையும் செய்ய வேண்டும்" என்கிறார். வாழ்த்துகள் சகோதரி!


டிரெண்டிங் @ விகடன்