வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (12/06/2018)

கடைசி தொடர்பு:13:00 (12/06/2018)

'கர்நாடகா செயலால் குறுவை சாகுபடி தகர்ந்துவிடக் கூடும்'- எச்சரிக்கும் ராமதாஸ்

'காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் பெயரை கர்நாடக அரசு  அறிவிக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு அறிவிக்கப்படாத சூழலில்,  அதைக் காரணம் காட்டி ஆணையத்தின் முதல் கூட்டம் தாமதப்படுத்தப்பட்டால்,  அது தமிழகத்துக்கு மேலும் பாதகத்தை ஏற்படுத்தும். அது, குறுவை சாகுபடி  செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாகத் தகர்த்துவிடக்கூடும்" என்று  பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமதாஸ்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரிப் பாசன  மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று  தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின்  இயலாமையால், மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால், விவசாயிகள்  கவலை அடைந்துள்ள நிலையில், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளுக்குக் கடந்த  9-ம் தேதி வரை, விநாடிக்கு சில நூறு கன அடி அளவில் மட்டுமே தண்ணீர்  வந்துகொண்டிருந்த நிலையில், நேற்று  முன்தினம் முதல் நீர்வரத்து பல மடங்கு  அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, கபினி அணைக்கு விநாடிக்கு  22,937 கன  அடி, கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு விநாடிக்கு 8478 கன அடி, ஹேமாவதி  அணைக்கு  விநாடிக்கு 9115 கன அடி, ஹாரங்கி அணைக்கு வினாடிக்கு 4780 கன  அடி என கர்நாடகத்தில் உள்ள 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 45,310 கன  அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 

இதனால், நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் கர்நாடக  அணைகளின் நீர் இருப்பு 5 டி.எம்-சிக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. கடந்த  10-ம் தேதி காலை  நிலவரப்படி, 4 அணிகளிலும் சேர்த்து 14 டி.எம்.சி மட்டுமே  தண்ணீர் இருந்த நிலையில், நேற்று காலை  இது 19.31 டி.எம்.சி-யாக  உயர்ந்துள்ளது. நீர்வரத்து இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு அதிகரித்திருப்பதால்,  கர்நாடக அணைகளின் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி விநாடிக்கு 50,000 கன  அடியைத் தாண்டியிருக்கக் கூடும். அணைகளின் நீர் இருப்பும், 25 டி.எம்.சி-யைத்  தாண்டியிருக்கக் கூடும். இது, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்குப்  போதுமானதாகும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜூன் மாதத்தில் 10   டி.எம்.சி-யும், ஜூலையில் 34 டி.எம்.சி-யும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.  கர்நாடகத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதால், இந்த அளவுக்கு  தண்ணீரைத் தாராளமாக வழங்கும் அளவுக்கு கர்நாடக அணைகளின் நீர் இருப்பு  இம்மாத இறுதிக்குள்ளாகவே அதிகரித்து விடும். காவிரிப் பாசன மாவட்டங்களில்  குறுவை   சாகுபடிக்கான தொடக்க கட்டத் தேவைகளுக்கு இந்த நீர் போதுமானது.  ஆனால், அணைகளில் உள்ள நீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விடுமா?  என்பதுதான் இப்போதைய நிலையில் முக்கிய வினா.

காவிரி நடுவர் மன்ற  இறுதித் தீர்ப்பின்படி, கடைமடைப் பாசன மாநிலங்களின் தேவையைப் பொறுத்து அவற்றுக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிடும் அதிகாரம்,  காவிரி மேலாண்மை ஆணையத்துக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது.  ஆனால், அந்த ஆணையம் அமைக்கப்படாமல் முடக்கும் சதியில் கர்நாடக அரசு  ஈடுபட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான அறிவிக்கை  கடந்த ஒன்றாம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதற்கு அடுத்த  நாளே ஆணையத்தில் தமிழகத்தின் பகுதி நேர உறுப்பினர் பெயர் அறிவிக்கப்பட்ட  நிலையில், அதன்பின்னர் 10 நாள்களாகியும் கர்நாடக அரசின் சார்பில்  நியமிக்கப்படவேண்டிய உறுப்பினர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.  கடைசியாக, இன்றைக்குள் உறுப்பினரை அறிவிக்கும்படி கர்நாடக அரசுக்குக் கெடு  விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு  காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதைத் தாமதப்படுத்துவதற்காக, இன்றும் காவிரி  மேலாண்மை ஆணைய உறுப்பினர் பெயரை கர்நாடக அரசு அறிவிக்காமல்  இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு அறிவிக்கப்படாத சூழலில், அதைக் காரணம்காட்டி, ஆணையத்தின் முதல் கூட்டம் தாமதப்படுத்தப்பட்டால், அது தமிழகத்துக்கு  மேலும் பாதகத்தை ஏற்படுத்தும். அது குறுவை சாகுபடி செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாகத்  தகர்த்துவிடக் கூடும். எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான  உறுப்பினர் பெயரை கர்நாடக அரசு இன்றைக்குள் அறிவிக்காவிட்டால், இதுவரை  நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களைக்கொண்டு காவிரி மேலாண்மை  ஆணையத்தின் கூட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் உடனடியாகக்  கூட்ட வேண்டும். அதில் தமிழகத்துக்கு முதல்கட்டமாக ஜூன், ஜூலை  மாதத்திற்கான 44 டி.எம்.சி தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடும்படி கர்நாடக  அரசுக்கு ஆணையம் ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, கர்நாடக  அணைகளில் உள்ள தண்ணீரை ஆணையத்தின் அனுமதியின்றி உள்ளூர்  பாசனத்திற்காக கர்நாடக அரசு திறக்கக் கூடாது என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.