``கோடி ரூபாய் கொடுத்தாலும் 'டைவர்ஸ்' கொடுக்க மாட்டேன்"- நவீனின் மனைவி திவ்யலட்சுமி 

``நான் இதுவரை யாரையும் திருமணம் செய்யவில்லை. திவ்யலட்சுமி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. என்னைப்பற்றி அவர் தவறான தகவலைத் தெரிவித்துவருகிறார். நான் யாரையும் அசிங்கப்படுத்தவிரும்பவில்லை. அவரால் நானும் என் குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

திவ்யலட்சுமி

``கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் டைவர்ஸ் பெற சம்மதிக்க மாட்டேன்''என்று மிமிக்ரி கலைஞர் நவீனின் மனைவி திவ்யலட்சுமி ஆவேசமாகக் கூறினார். 

தனியார் தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக கலக்கிய நவீனின் திருமண நிகழ்ச்சியை நீலாங்கரை போலீஸார் தடுத்துள்ளனர். நவீனுக்கு எதிராக திவ்யலட்சுமி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில்தான் நவீன், இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய ஏற்பாடுசெய்துள்ளார். அதைத்தான் திவ்யலட்சுமி தடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீலாங்கரை போலீஸார், திவ்யலட்சுமிடமும் நவீனிடமும் நீண்ட நேரம் விசாரித்துள்ளனர். விசாரணையில், 'திவ்யலட்சுமியை எனக்குப் பிடிக்கவில்லை' என்று திட்டவட்டமாக நவீன் கூறியுள்ளார். திவ்யலட்சுமி, 'என்னை காதலித்துத் திருமணம்செய்துவிட்டு, ஏமாற்றிய நவீனை சும்மா விடமாட்டேன்' என்று தெரிவித்துள்ளார். 

திவ்யலட்சுமியிடம் பேசினோம். ``நவீன் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்ளும் தகவல் கிடைத்ததும் அவரிடம் போனில் பேசினேன். அப்போது அவருக்கும் எனக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவரை ஒன்பது ஆண்டுகளாக காதலித்தேன். என்னுடைய வாழ்க்கையை கேள்விகுறியாகிவிட்டார். என்னை சமாதானப்படுத்திவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய முயற்சி செய்கிறார். என்னுடைய வாழ்க்கையைக் கேட்டால் எப்படி கொடுக்க முடியும். நானும்  நவீனும் அரக்கோணத்தில் பதிவுத் திருமணம் செய்துள்ளோம். அவரைக் கட்டாயப்படுத்தி நான் திருமணம் செய்துகொண்டதாக அவர் கூறியுள்ளார். அவருக்கு விருப்பம் இல்லை என்றால் பதிவுத் திருமணத்தை தடுத்து நிறுத்தியிருக்கலாம். போலீஸ் நிலையத்தில்கூட நவீனுக்கு ஆதரவாக என்னிடம் பலர் பேரம் பேசினார்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் அவ்வளவு எளிதில் டைவர்ஸ் கொடுக்க மாட்டேன். நவீன் தாக்கல் செய்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் என்னைப்பற்றி அவதூறான தகவல்களை அவர் சொல்கிறார்" என்றார் ஆவேசமாக.

இதுகுறித்து நவீனிடம் கேட்டதற்கு, ``நான் இதுவரை யாரையும் திருமணம் செய்யவில்லை. திவ்யலட்சுமி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. என்னைப் பற்றி அவர் தவறான தகவலைத் தெரிவித்துவருகிறார். நான் யாரையும் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. அவரால் நானும் என் குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளோம். அவர் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இவ்வளவு நடந்த பிறகும் செட்டில்மென்ட் பேசுகிறார்கள். அவருடன் என்னால் வாழ முடியாது என்று விலகிவிட்டேன். சட்டப்படி திவ்யலட்சுமி பிரச்னையை எதிர்கொள்வேன்" என்றார். 

திவ்யலட்சுமி திருமணம் தொடர்பாக நவீன், கடந்த சில ஆண்டுக்கு முன்பு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான்  இருவரும் ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டிவருகின்றனர். இது, சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!