வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (12/06/2018)

கடைசி தொடர்பு:14:35 (12/06/2018)

`வாஜ்பாய் நலமுடன் இருக்கிறார்!’ - எய்ம்ஸில் பேட்டியளித்த வைகோ

உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். ' அவர் நலமுடன் இருக்கிறார்' என சந்திப்புக்குப் பிறகு பேசியிருக்கிறார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. 

வைகோ

மத்தியில் இரண்டு முறை பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் தீவிர அரசியலிலிருந்து விலகி இருந்தார். அவ்வப்போது பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் சிலர், அவரைச் சந்தித்துப் பேசி வந்தனர். இருப்பினும், `வாஜ்பாய் எப்படி இருக்கிறார்?' என்ற கேள்வி, பொதுமக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக, நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வாஜ்பாய். இதுகுறித்து விளக்கம் அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், `வழக்கமாக நடைபெறும் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பிறகு, விரைவில் வீடு திரும்புவார்' எனத் தெரிவித்தது. எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரந்தீப் குலேரியாவின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

'அவர் விரைவில் குணமடைய வேண்டும்' என பா.ஜ.க தொண்டர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்து வருகின்றனர். நேற்று பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் விஜய் கோயல், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தனர். இன்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தார். இதன்பிறகு பேட்டியளித்த வைகோ, ` வாஜ்பாய் உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார். அவரின் உடல்நலம் குறித்து கவலைப்பட வேண்டாம். அவர் நலமுடன் உள்ளார்' எனத் தெரிவித்தார்.