வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (12/06/2018)

கடைசி தொடர்பு:14:43 (12/06/2018)

`வேறு மாநிலத்தில் படித்தாலும், மெடிக்கல் சீட் கிடைக்கும்!' - தமிழகத்துக்கு மற்றொரு அநீதி

`தமிழகத்துக்கான மருத்துவ இடங்களில், வெளிமாநிலத்தவர்களை நிரப்பும் வகையில் புதிய பிரிவு ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் எனக் கொதிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

நீட் தேர்வு முறைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர் தமிழகக் கல்வியாளர்கள். இந்தாண்டு நடந்த அடுத்தடுத்த இரண்டு தற்கொலைகள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 'தமிழக கோட்டாவில் வெளிமாணவர்களைக் கொண்டு வரும் வகையில் மற்றொரு அநீதி நடந்துகொண்டிருக்கிறது' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

மருத்துவ விண்ணப்பம்

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்குப் பிறகே, நீட் தேர்வுக்கு எதிராகத் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடக்கத் தொடங்கின. 'நீட் தேர்வு வேண்டாம்' என முழக்கம் எழுப்பிய போதிலும், 'நீட் இல்லாமல் மருத்துவம் இல்லை' என்ற உண்மையைப் புரிந்துகொண்டு பயிற்சி மையத்துக்குச் சென்றார் திருச்சி டோல்கேட் பகுதியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ. நீட் தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்களுக்கு, மருத்துவக் கனவு நிறைவேற வாய்ப்பில்லாமல் போகவே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு முன்னதாக, ப்ளஸ் டூ தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்ற பிரதீபாவும் மரணத்தைத் தழுவினார். இந்த துக்கங்கள் ஒருபுறம் அணிவகுத்துக் கொண்டிருக்க, அடுத்த அபாயத்தை வெளிக்கொண்டு வந்துள்ளனர் கல்வியாளர்கள். 

``நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு சில விதிமுறைகளை மாநில அரசு வகுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 85 சதவிகித இடத்தில் மருத்துவம் படிக்க விரும்பினால், '6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இங்கு முடித்திருக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். முன்பெல்லாம், 8 முதல் 12-ம் வகுப்பு நிறைவு செய்திருந்தால் போதும் என்பது மருத்துவத்துக்கான தகுதியாக இருந்தது. '6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அந்தந்த மாநிலத்தில் படித்திருக்க வேண்டும்' எனக் கூறிவிட்டு, 'எந்தெந்த ஆவணத்தை வைக்க வேண்டும்?' என்ற இடத்தில், '8 முதல் 12 வரை படித்ததற்கான சான்றை வைக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். ஏன் இவ்வளவு குழப்பம் என்று தெரியவில்லை" என விவரித்த மருத்துவக் கல்வித்துறை அதிகாரி ஒருவர், 

``தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியை முடிக்காமல், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என எந்த மாநிலத்தில் படித்திருந்தாலும், பெற்றோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான நேட்டிவிட்டி சான்றிதழ் கொடுத்துவிட்டால், அவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்கலாம்' என்ற விதிமுறையை வகுத்துள்ளனர். கேரளாவுக்குப் பக்கத்தில் இருக்கும் தமிழகப் பகுதியான க.க.சாவடியில் குடியிருக்கும் ஒரு மாணவர், பாலக்காட்டில் உள்ள பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர் தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்கலாம். கேரளாவைப் பொறுத்தவரையில் நீட் தேர்வில் 500 மதிப்பெண்களைப் பெறுவது என்பது சாதாரண விஷயம். அங்குள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்த தமிழக மாணவர், எளிதாக தமிழ்நாட்டுக்குள் வந்து மருத்துவம் படிக்கலாம். இங்கு 300 மதிப்பெண்களைப் பெறுவதே சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 

நீட்

தமிழ்நாட்டில் மொத்தம் நான்காயிரம் மருத்துவ இடங்கள் உள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில் 69 சதவிகித இடங்கள் நிரப்பப்பட்டால், மீதமுள்ள 31 சதவிகித இடங்கள் இந்த ஓப்பன் கேட்டகிரி வாயிலாக நிரப்பப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். அப்படிப் பார்த்தால் தமிழகப் பிரிவில் உள்ள ஆயிரக்கணக்கான இடங்களை வேறு மாநிலத்தில் படித்த மாணவர்கள் அபகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். 'இங்கு படித்திருந்தால் மட்டுமே மருத்துவத்தில் இடம்' என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். நமது மருத்துவ இடங்களை வேறு மாநிலத்தில் படித்தவர்கள் பெற்றுக்கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏற்கெனவே, 15 சதவிகித இடத்தை அகில இந்திய கோட்டாவுக்குக் கொடுக்கிறோம். இப்போது ஓப்பன் கேட்டகிரி என்ற பெயரில் கூடுதல் இடங்களைத் தாரைவார்க்கப் போகிறோம். இதற்கு எதிராக, அரசியல் கட்சிகள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும்" என்றார் வேதனையுடன். 

நீட் விதிமுறைகளில் உள்ள குளறுபடி குறித்து, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவிடம் பேசினோம். `` இதில் எந்தவிதக் குழப்பங்களும் இல்லை. விதிமுறைகள் தெளிவாக வகுக்கப்பட்டிருக்கின்றன" என்றவர், மருத்துவக் கல்வி இயக்குநகர அதிகாரி ஒருவரிடம் இணைப்பைக் கொடுத்தார். நம்மிடம் பேசிய அந்த அதிகாரி, `` இங்கிருந்து பணிநிமித்தமாக வெளிமாநிலங்களுக்குச் சென்ற பெற்றோர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில்தான் இப்படியொரு கேட்டகிரி கொண்டு வரப்பட்டிருக்கிறது. அந்த பெற்றோர்கள், தங்களுடைய ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவைகளை சமர்ப்பிக்க வேண்டும். இதனால் யாரும் பாதிப்படையப் போவதில்லை" என்றதோடு முடித்துக்கொண்டார்.