`உங்கள் வாடகையை உயர்த்திவிட்டோம்’ - சீல் வைக்கப்பட்டதால் பொங்கிய ஊட்டி கடை உரிமையாளர்கள்

ஆணையர் ரவியிடம், ஊட்டி நகராட்சி ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கொடுக்க பணம் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாகத்தான், நகராட்சி கடைகளின் வாடகைத் தொகையை வசூலிப்பதில் தீவிரம் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டபோது, கடை வாடகையை அவர்கள் கட்டித்தானே ஆக வேண்டும். அது முற்றிலும் தவறான தகவல்' என்றார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி வணிக வளாகத்தில் சுமார் 2,000 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்குக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு 75 சதவிகிதம் வரை நகராட்சி நிர்வாகம் வாடகை உயர்த்தி நோட்டீஸ் வழங்கியது. அதை ஏற்க மறுத்த கடை உரிமையாளர்கள் வழக்கமாக அவர்கள் செலுத்தி வந்த வாடகைத் தொகையை டி.டி (டிமாண்ட் டிராப்ட்) மூலம் நகராட்சிக்கு செலுத்தி வந்துள்ளனர்.

ஊட்டி கடை உரிமையாளர்கள்

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று முதற்கட்டமாக நகராட்சி நிர்வாகம் சார்பில் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்த
53 கடைகளுக்குப் புதிய வாடகைத் தொகையை 3 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் கட்டத் தவறினால் உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடைகள் ஏலம் விடப்படும் எனவும் நோட்டீஸ் விநியாேகம் செய்யப்பட்டது. இந்நிலையில் நோட்டீஸ் வழங்கப்பட்டும், புதிய வாடகையைச் செலுத்தாத கடைகளுக்கு, போலீஸார் உதவியுடன் நகராட்சி ஆணையர் அதிகாலை 5.30 மணியளவில் சீல் வைக்கத் தொடங்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்தில் குவிந்த அனைத்துக் கடை உரிமையாளர்களும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதைக் கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் ஊட்டி லோயர் பஜார் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் லோயர் பஜார் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து உதகமண்டல நகராட்சி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் 6 பேரை நகராட்சி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, ஆணையருடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இது குறித்து உதகமண்டல நகராட்சி அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் முஸ்தபா கூறுகையில், ‛‛வழக்கமாக, நகராட்சி வணிக வளாகக் கடைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 முதல் 15 சதவிகிதம் வரை வாடகை உயர்த்தப்படும். ஆனால், ஊட்டி நகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஒரேயடியாக 75 சதவிகிதம் வரை வாடகை உயர்த்தப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. 2,000 கடைகளுக்கு உயர்த்தப்பட்ட வாடகைத் தொகை ரூ.13 கோடி. இதை ஏற்க அனைத்துக் கடை உரிமையாளர்களும் மறுத்து, டி.டி (டிமாண்ட் டிராப்ட்) மூலம் நகராட்சிக்கு பழைய வாடகையைச் செலுத்தி வருகிறோம். இந்நிலையில் உயர்த்தப்பட்ட புதிய வாடகைத் தொகையைச் செலுத்தும்படி, கடந்த வியாழக்கிழமையன்று முதற்கட்டமாக 53 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நோட்டீஸில் 3 நாள்களுக்குள் வாடகைத் தொகையைச் செலுத்தத் தவறினால் உரிமம் ரத்து செயய்யப்படும், கடைகள் ஏலம் விடப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, நோட்டீஸ் வழங்கியது தொடர்பாக நேற்று (11.6.2018) நகராட்சி ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம், அப்போதுகூட அவர், சுமுகமாக முடித்துக்கொள்ளலாம் என்றார். இந்நிலையில் கடை உரிமத்தை ரத்து செய்தது தொடர்பாக எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல், இன்று அதிகாலை முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பதாகத் தகவல் அறிந்து, வந்து பார்த்தபோது 33 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது, மேலும் 20 கடைகளுக்கு சீல் வைக்கத் தயாராகிக்கொண்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டி நகராட்சி வணிக வளாகத்தில் செயல்படும் சுமார் 2,000 கடை உரிமையாளர்களும் கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டோம். பின்னர் நகராட்சி ஆணையரிடம் பேச்சு வார்த்தைக்கு, போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது, நடந்த பேச்சுவார்த்தையில், சீல் வைக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் பழைய வாடகையுடன் ஒரு சிறு தொகையை சேர்த்துக் கட்ட வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிடுவதாக உறுதியளித்து கடைகளைத் திறந்துள்ளோம். வைக்கப்பட்ட சீல்களும் அகற்றப்பட்டு வருகின்றன. சீல் வைக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் மிக விரைவில் பழைய வாடகையுடன் சிறு தொகையைச் செலுத்தி விடுவார்கள். இப்பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையர் உறுதியளித்துள்ளார்’’ என்றார். 

இது குறித்து ஊட்டி நகராட்சி ஆணையர் ரவி கூறுகையில், ‛‛இன்று நடந்த பேச்சுவார்த்தையில், முதற்கட்டமாக தவணை முறையில் ஒரு தொகையை சீல் வைக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் கட்டவுள்ளனர். மேலும், இரண்டு நாள்களுக்குப் பின்னர் மீதமுள்ள தொகையையும் முழுவதுமாகச் செலுத்திவிடுவார்கள். தொடர்ந்து பிற கடைகளிலும் புதிய வாடகைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய வாடகையை நிச்சயம் அவர்கள் கட்ட வேண்டும்'' என்று கூறினார். தொடர்ந்து ஆணையர் ரவியிடம், ஊட்டி நகராட்சி ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கொடுக்க பணம் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாகத்தான், நகராட்சி கடைகளின் வாடகைத் தொகையை வசூலிப்பதில் தீவிரம் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டபோது, ’கடை வாடகையை அவர்கள் கட்டித்தானே ஆக வேண்டும். அது முற்றிலும் தவறான தகவல்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!