வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (12/06/2018)

கடைசி தொடர்பு:16:46 (12/06/2018)

பஞ்சலிங்க அருவி... முதலைப் பண்ணை... அமராவதி அணை... திருமூர்த்திமலைக்கு ஒரு விசிட்!

திரும்பிய திசையெல்லாம் பனியன் கம்பெனிகள்... சாலையெங்கும் வாகன நெரிசல்கள்... எப்போதும் பரபரக்கும் திருப்பூர் மாவட்டத்தில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு சுற்றுலா தலம் இல்லையே என்று அலுத்துக்கொள்பவர்கள் ஏராளம்.

பஞ்சலிங்க அருவி... முதலைப் பண்ணை... அமராவதி அணை... திருமூர்த்திமலைக்கு ஒரு விசிட்!

திரும்பிய திசையெல்லாம் பனியன் கம்பெனிகள்... சாலையெங்கும் வாகன நெரிசல்கள் என எப்போதும் பரபரக்கும் திருப்பூர் மாவட்டத்தில், `சொல்லிக்கொள்ளும்படி ஒரு சுற்றுலாத் தலம் இல்லையே' என்று அலுத்துக்கொள்பவர்கள் ஏராளம். அப்படியானவர்களை எல்லாம் ஆச்சர்யப்படுத்தி ஆர்ப்பரிக்கவைப்பதுதான் திருமூர்த்திமலையின் ஸ்பெஷல்!

திருமூர்த்திமலை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சரியாக 21 கிலோமீட்டரில் எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சிமலைகளின் அடிவாரப் பகுதியில் அமைந்திருக்கிறது திருமூர்த்திமலை. அமணலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கும் திருக்கோயில் இங்கு அமைந்திருந்தாலும், சுற்றுலாப் பயணிகளின் மெயின் அட்ராக்‌ஷன் மலைகளுக்கு நடுவில் ஆர்ப்பரித்துக் கொட்டும் பஞ்சலிங்க அருவிதான்.

உடுமலை பேருந்துநிலையத்திலிருந்து திருமூர்த்திமலைக்கு நாள் முழுவதும் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில் ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தோம். அடுத்த அரை மணி நேரத்தில் சம்பவ இடத்தை அடைந்தோம்.

அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரருக்கு ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு, அருவிக்குச் செல்லும் வழியைத் தேடினோம். அங்கே கவுன்ட்டரில் கட்டணத்தைச் செலுத்தினால்தான் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி கிடைக்கும். அதிகமில்லை, நபர் ஒன்றுக்கு 5 ரூபாய் என்றதும், அப்போதே அருவியில் நனைந்துவிட்ட பேரானந்தத்தில் திளைத்தோம்!  ``மேலே சென்றால், சாப்பிட எதுவும் கிடைக்காது'' என்று சிலர் அறிவுறுத்தியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உப்புமாங்காய், அன்னாசிப்பழம், இலந்தைவடை, பொரிகடலை என, சிலபல அயிட்டங்களை வாங்கி பைகளில் நிரப்பிய பிறகே மலைப்பாதையில் நம் பயணம் தொடங்கியது.

திருமூர்த்திமலை

வளைந்து நெளிந்து இல்லாமல் நேராகவே செல்கிறது மலைப்பாதை. ஏற்ற-இறக்கங்கள் மட்டும் அவ்வப்போது நம்மை நிற்கவைத்து மூச்சு வாங்கச்செய்துவிடுகின்றன.ஏற்கெனவே உள்ளூர் அதிகாரிகளிடம் உறுதிசெய்துவிட்டுத்தான் இந்தப் பயணத்தையே திட்டமிட்டோம் என்றாலும், அருவிக்குச் சென்றுவிட்டு எதிர்திசையில் வரும் சில சுற்றுலாப் பயணிகளிடம் நம்மால் அந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. ``ஏனுங்ண்ணா... அருவியில தண்ணி வருதுங்ளா?'' ``ம்ம்... வருது வருது!'' என்றவாறே, தன் கையில் வைத்திருந்த தடிமனான ஒரு குச்சியை நம்மிடம் கொடுத்துவிட்டு, ``போற வழியில யூஸ் ஆகும்பா!'' என்று கூறி கடந்து சென்றார் ஒரு பயணி.

அருவியை நோக்கிய இந்தப் பயணத்தில் நமக்கான தற்காப்பு ஆயுதமே அந்தக் குச்சிதான் என்பது பிறகு தெளிவாகப் புரிந்தது. செல்லும் வழி முழுக்க காலகேயனின் படையைப்போல சூழ்ந்துகொண்டு, சுற்றுலாப் பயணிகளின் மீது தாக்குதலைத் தொடுத்தவண்ணம் இருந்தது குரங்குகளின் கூட்டம். சற்று அசந்தாலும், நம் பொருள்களை கொள்ளையர்களைப்போல சில நொடியில் அபேஸ் செய்துவிடுகின்றன  குரங்குகள். `இதுக்கெல்லாம் நீங்கதான்டா காரணம்! நாங்க வசிக்கிற காட்டுக்குள்ள வந்தீங்க சரி. வந்தோமா... போனோமான்னு இல்லாம, உங்க குழந்தைங்களுக்கு வேடிக்கை காட்ட எங்களுக்கு மிக்ஸரையும் பூந்தியையும் போட்டீங்க. பொட்டலம் பொட்டலமா குடுத்து நல்லா சாப்பிடப் பழக்கிவிட்டுட்டு, இப்ப வந்து பொலம்புனா எப்படி? மரியாதையா இருக்கிறதைக் குடுத்துட்டுப் போ!' என்பதுபோலவே நம்மை நோக்கி முறைத்தார் ஒரு குரங்கார். வாட்டர் பாட்டிலைக்கூட விடாப்பிடியாகப் பிடுங்குவதெல்லாம், காட்டுயிர்களின் உணவுக் கலாசாரத்தை நாம் எந்த அளவுக்குச் சிதைத்திருக்கிறோம் என்பதையல்லவா காட்டுகிறது!

அருவி

ஒருவழியாக சுமார் ஒரு கிலோமீட்டர் மலைப்பாதைப் பயணத்துக்குப் பிறகு நாம் தேடிச்சென்ற பஞ்சலிங்க அருவியைக் கண்டடைந்தோம். மக்கள் குடும்பம் குடும்பமாக அருவியில் குதூகலத்துடன் குளித்துக்கொண்டிருக்க, தங்களின் உடமைகளை பத்திரமாகப் பாதுகாக்கவென்றே குடும்பத்துக்கு ஓர் அப்பாவியை நேந்துவிட்டிருந்தார்கள். நாமும் அதற்காகவே ஒரு தியாகியை ஏற்பாடு செய்திருந்ததால், அவரை நம் பைகளுக்கு அருகே அமரவைத்துவிட்டு, ஆனந்தக்கூத்தாட அருவிக்குள் மூழ்கினோம். மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடர்வனத்தில் ஊற்றெடுத்து, பல மூலிகைச்செடிகொடிகளைக் கடந்தோடி வந்து, அருவியாக ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் அட்டகாசமாகக் கழிந்தது அடுத்த சில மணி நேரம். அருவிக்கு மேலே பாறை முகடுகளுக்குள் பஞ்சலிங்கக் கோயில் ஒன்று இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு மாதமும் பிரதோஷத்தன்று மட்டுமே பக்தர்களை அங்கு செல்ல அனுமதிக்கிறார்கள். மற்ற தினங்களில் தப்பித்தவறிகூட அங்கு யாரும் சென்றுவிட முடியாதபடி ஆள்களைப் போட்டு பாதுகாப்பதால், அவர்களிடம் மன்றாடிக் கேட்டு மேலே சென்று படங்களை க்ளிக் செய்து வந்தோம்.

திருமூர்த்திமலை

மணியோ மதியம் 12-ஐக் கடக்க, ஆங்காங்கே ரவுண்டுகட்டி அமர்ந்தவாறு வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டுவந்த உணவு அயிட்டங்களை ருசிபார்க்கத் தொடங்கியிருந்தார்கள் மக்கள். தக்காளிச்சாதமும், புளிசோறும், கொஞ்சம் புதினா சட்னியும் இல்லாமல், நம் தமிழ்க் குடும்பங்களுக்கு எந்தவொரு பிக்னிக்கும் முழுமை அடைந்ததில்லையே! நமக்கோ பசி வயிற்றைக் கிள்ள, பைகளுக்குள் கிடந்த நொறுக்குத்தீனிகளை அள்ளி அரைத்துவிட்டு, ஈர உடம்புடன் மீண்டும் அடிவாரம் நோக்கிக் கிளம்பினோம். திருமூர்த்தி அணைக்கட்டில் படகுசவாரி வெகுபிரபலம். ஆனால், என்ன காரணத்தினாலோ கடந்த ஒரு வருடமாகவே அதைத் தடைசெய்திருக்கிறார்கள். அதேசமயம் பல தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களின் பாடல் காட்சிகளைப் படமாக்கும் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாக இந்தத் திருமூர்த்தி அணைப்பகுதி திகழ்கிறது. நாம் சென்றிருந்த நேரத்தில் பிரபுதேவாவும் நிக்கி கல்ராணியும் செம குத்துப்பாடல் ஒன்றுக்கு ஆட்டமாடிக்கொண்டிருந்தார்கள்.

அணைக்கட்டின் மறுகரையில் உள்ள ஒரு மலைக்குன்றுக்கு `டர்ட்டில் ராக்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு அப்படியே ஆமையின் தோற்றத்தில் இருப்பதால் அதை ஆங்கிலத்தில் `டர்ட்டில் ராக்' என்று அழைக்கிறார்களாம். அணையையொட்டிய பகுதியில் வண்ண மீன் காட்சியகம் இயங்கிவருகிறது. அங்கும் 5 ரூபாய் கட்டணம் செலுத்திவிட்டு உள்ளே நுழைந்தால்,  மஞ்சள் கெளுத்தி, பிரானா, கப்பீஸ், கத்திவால், வெள்ளிச்சுறா போன்ற அரியவகை மீன் இனங்களைக் கண்டு ரசிக்கலாம். 

திருமூர்த்திமலை

திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தவறாமல் செல்லவேண்டிய மற்றுமொரு சுற்றுலாத் தலம் அமராவதி அணை. அங்கும் குளிப்பதற்கு அருவி இருக்குமா என்றால், இல்லை! அமராவதி அணையின் அழகையும், மிரட்டலான முதலைப் பண்ணையையும் நாம் அங்கு கண்டு ரசிக்கலாம். திருமூர்த்தி மலையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது அமராவதி அணை.

திருமூர்த்திமலைக்கு அருகிலேயே எங்கேயாவது மதிய உணவை முடித்துவிட்டு அமராவதிக்குப் போகலாம் என்றுகனகரத்தினம் நம் பொதுக்குழுவில் தீர்மானம் போட்டதால், அணைக்கு அருகிலேயே சாப்பாட்டுக் கடையைத் தேடினோம். ``அணையிலிருந்து உடுமலை மெயின் சாலையில் ஒருவரிடம், சுடச்சுட மீன் சாப்பாடு சிறப்பாக இருக்கும்'' என்றார்கள். சாலையோரமாக ஒரு குடிசையை அமைத்து, உள்ளே ஐந்து பேர் அமரும் அளவுக்கு ஒரு டேபிளைப் போட்டு கடையை நடத்திவருகிறார் கனகரத்தினம். அதில் ஆச்சர்யமான விஷயம் என்னெவென்றால், கனகரத்தினம் ஓர் ஈழத்தமிழர். பக்கத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் இவர், ஒரு தொழில் வாய்ப்பாக இந்த மீன் கடையை 12 வருடத்துக்கு முன்பு தொடங்கியிருக்கிறார். இப்போது திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலாவாசிகள், இவரை செல்போனில் தொடர்புகொண்டு முன்கூட்டியே ஆர்டர் கொடுத்தால்தான் இவரிடம் சாப்பாடு கிடைக்கும் என்ற அளவுக்குப் பிரபலமாகிவிட்டார். கனகரத்தினத்திடம் பேச்சுக் கொடுத்தோம்...

``90-களில் ஈழப்போராட்டம் உச்சத்தில் இருந்த சமயம், வவுனியாவிலிருந்து அகதிகளாக இங்கு வந்து சேர்ந்தோம். ஊரில் விவசாயம் பார்த்து வாழ்ந்த குடும்பம் எங்களுடையது. இங்கு முகாமில் எத்தனை நாள்களுக்குத்தான் சும்மாவே இருப்பது? நான் நன்றாகச் சமைப்பேன் என்பதால், முயன்று பார்க்கலாமே என்றுதான் இங்கு மீன் சாப்பாட்டுக் கடையைத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று அடக்கமாகப் புன்னகைத்தார் கனகரத்தினம். அவர் பரிமாறிய சூடான மீன் குழம்பும் சுவையான மீன் வறுவலும் நமக்குச் சொர்க்கத்தைக் காட்டின.

அங்கிருந்து கிளம்பிய நம் வாகனம் நேராக அமராவதி அணையில் போய் நின்றது. திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 54 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீராதாரமாகவும், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல நூறு கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறது அமராவதி அணை. அணையின் மேல் பகுதிக்குச் சென்று ஒட்டுமொத்த அழகையும் முழுமையாய்க் கண்டு ரசிக்கலாம். மொத்தம் ஒன்பது ஷட்டர்களைக்கொண்ட பிரமாண்ட அமராவதி அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் அழகை ரசிப்பதற்கே அத்தனை ஆனந்தமாக இருக்கிறது. அணையிலிருந்து தெறிக்கும் சாரலில் நனைந்துகொண்டே, அங்கு விற்கப்படும் மீன் வறுவலைச் சுவைப்பது அளவில்லா சுகானுபவம்!

திருமூர்த்திமலை

அணைக்கு அருகில் அமைந்திருக்கும் முதலைப்பண்ணைக்குள் நுழைந்தோம். பெரியவர்களுக்கு 10 ரூபாய், குழந்தைகளுக்கு 5 ரூபாய் எனக் கட்டணம் வசூலிக்கிறார்கள். 1976-ல் திறக்கப்பட்ட இந்த முதலைப்பண்ணை அமராவதி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. பெரிய பெரிய தொட்டிகளுக்குள் 73 பெண் முதலைகளும்,  28 ஆண் முதலைகளும் என மொத்தம் 101 முதலைகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு வளர்க்கப்பட்டு வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விடப்பட்ட ஏராளமான முதலைகள், அமராவதி அணை மற்றும் ஆற்றுப்பகுதிகளில் அதிகம் உலவுவதாகக் கூறுகிறார்கள். திருப்பூர் மற்றும் கோவை மாவட்டக் கல்வி நிறுவனங்களின் சுற்றுலாப் பட்டியலில் இந்த முதலைப்பண்ணை தவறாமல் இடம்பெறுகிறது. எந்தவோர் அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்புகள் போடப்பட்டிருப்பதால், இந்த முதலைப்பண்ணைக்குள் குடும்பத்துடன் ஜாலியாகச் சென்று வரலாம்.

 திருமூர்த்திமலை

அப்புறம் என்ன... ஒருநாள் சுற்றுலாவுக்குத் திட்டமிடும் மக்கள், யோசிக்காமல் திருமூர்த்திமலைக்கு ட்ரிப் அடியுங்கள்!


டிரெண்டிங் @ விகடன்