எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன்? முதல்வரை கைகாட்டிய பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டாலின் சட்டமன்றத்துக்குச் செல்லாமல் பள்ளி மாணவர்கள்போல கட் அடித்துவிட்டு வெளியே போய்க்கொண்டு இருக்கிறார். அவர் சட்டமன்றத்தில் இருந்தும் பயன் இல்லை. ஒரு நாள் சட்டமன்றத்தை கட் அடித்துவிட்டு பெங்களூருக்கு போய்விட்டு வர வேண்டும்.

''எஸ்.வி.சேகரை  கைது செய்யாதது குறித்து முதல்வர் மற்றும் டி.ஜி.பி-யிடம்தான் கேட்க வேண்டும். அவர் கைது செய்யப்படுவதை பி.ஜே.பி தடுக்கவில்லை. இன்றைக்கு பலவீனமான அரசாகவும் தலைமை இல்லாத அரசாகவும் அ.தி.மு.க  இருக்கிறது'' என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

மத்திய  இணை அமைச்சர்  பொன் ராதாகிருஷ்ணன்

தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சென்னையிலிருந்து சேலத்துக்குப் புதியதாக அமைக்கப்படக்கூடிய 8 வழி சாலையான பசுமைச் சாலை திட்டத்துக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்காக முதல்வருக்குப் பாராட்டுகள். தற்போது அந்தச் சாலை அமைப்பதில் பொய்யான காரணங்களைக் காட்டி, அதைத் தடுக்கக்கூடிய முயற்சிகளில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தூண்டி விடுவதோடு பொதுமக்கள் மத்தியிலும் தவறான பிரசாரங்களை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற செயல்பாடுகள் எந்த புதிய திட்டத்தையும் தமிழகத்துக்குக் கொண்டு வர முடியாமல் செய்துவிடும். மற்ற மாநிலங்களில் புதிய சாலை வேண்டும் எனச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆந்திராவில் புதிய சாலை, துறைமுகங்கள் வேண்டும் எனப் போராடி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் எந்தொரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார்கள்.

ஸ்டாலின் சட்டமன்றத்துக்குச் செல்லாமல் பள்ளி மாணவர்கள்போல கட் அடித்துவிட்டு வெளியே போய்க்கொண்டு இருக்கிறார். அவர் சட்டமன்றத்தில் இருந்தும் பயன் இல்லை. ஒரு நாள் சட்டமன்றத்தை கட் அடித்துவிட்டு பெங்களூருக்கு போய்விட்டு வர வேண்டும். தமிழகத்துக்குத் தண்ணீர் தர மாட்டேன் என்கிற அவர்களின் கூட்டணி அரசுதான் அங்கு செயல்படுகிறது. அவர்களிடம் காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்த வேண்டும். காவிரி ஆணையத்தை மத்திய அரசு அமைத்துவிட்டது. ஆனால், தற்போது காவிரி ஆணையத்துக்கான உறுப்பினர்களைக் கர்நாடக அரசு அறிவிக்கவில்லை. அதைப்பற்றி தி.மு.க-வும் காங்கிரஸ் கட்சியும் வாய் திறக்கவில்லை. பெங்களூரு செல்லாமல் சட்டமன்றத்தை கட் அடித்துவிட்டு வீட்டில் போய் உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.

எஸ்.வி.சேகரை கைது செய்யாதது குறித்து முதல்வர் மற்றும் டி.ஜி.பி-யிடம்தான் கேட்க வேண்டும். அவரை கைது செய்வதை பி.ஜே.பி தடுக்கவில்லை. தமிழக அரசுப் பயங்கரவாதத்தை ஒடுக்கவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் தயாராக இல்லை. எந்த முயற்சி எடுத்தாலும் கறுப்புகொடி காட்டுவார்கள். தமிழகத்துக்குத் தண்ணீர் கொண்டு வந்தாலும், தொழிற்சாலை கொண்டு வந்தாலும் கறுப்புகொடி காட்டுவார்கள். மக்களின் மனநிலையைச் சரி செய்ய வேண்டும். தமிழக அரசு யார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை. காவல்துறையினரும், அதிகாரிகளும் அரசாங்கத்தால் அச்சுறுத்தப்படுகிறார்கள். தூத்துக்குடியில் பயங்கரவாதிகள் நுழைந்தால் தான் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டி இருந்தாகத் தமிழக முதல்வர் கூறினார். சுட சொன்ன அதிகாரிகளுக்குத் தண்டனை கொடுக்கிறார்கள். சுட்ட போலீஸாரை யாரையும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். சுட்ட போலீஸார்மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் அதிக இடங்களைக் கைபற்றிய கட்சியாகப் பி.ஜே.பி விளங்கும். தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சியைக் கொண்டு வர முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது. இன்றைக்கு பலவீனமான அரசாக அ.தி.மு.க இருக்கும்போதும் தலைமை இல்லாத நிலையிலும் வலுவான நிலையில் வந்திருக்கக்கூடிய தி.மு.க-வை யாரும் மதிப்பதற்கு தயாராக இல்லை. வரும் டிசம்பர் மாதத்துக்குள்ளாகத் தி.மு.க-வில் உள்ள பல தலைவர்கள் தி.மு.க-வை விட்டு வெளியே சென்றுவிடுவார்கள் எனச் சொல்லி வருகிறார்கள். தி.மு.க அழிந்துவிடும் எனத் தி.மு.க-வே  நம்புகிறது. இந்நிலையில் வளமான ஆட்சியைக் கொடுக்க வேண்டிய கட்சியாக பி.ஜே.பி உள்ளது. பி.ஜே.பி எந்தம் கட்சியின் கூட்டணிக்காகவும் ஏங்கி நிற்கவில்லை'' எனத் தெரிவித்தார்.

பொன் ராதாகிருஷ்ணன்

இதைத் தொடர்ந்து திருவாரூர் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மத்திய மோடி அரசைப் பொறுத்தவரை, தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியை உறுதி செய்து கொடுத்துள்ளது. 150 ஆண்டுகால பிரச்னையான காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வாகக் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்துக்காக அரசு முயன்று வருகிறது. கிழக்குக் கடற்கரை சாலைத் திட்டம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடமையாற்றுவது இல்லை. வெளிநடப்பு செய்யும் நோக்கத்தோடு தனக்கு ஒதுக்கப்படாத நேரங்களில் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வெளிநடப்பு செய்து வருகின்றனர்" என்று குற்றம்சாட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!