வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (12/06/2018)

கடைசி தொடர்பு:17:25 (12/06/2018)

`மீனவர்கள் எங்களின் கண்கள்’ - சொல்கிறார் கடற்படைத் தலைமை அதிகாரி

மீனவர்கள் எங்களின் கண்களாகவும் காதுகளாகவும் இருந்து உதவுகின்றனர். அவர்கள் மூலம் தகவல்களைப் பெற அவர்களுடன் இணக்கமாக இருந்து வருகிறோம்.

``இந்திய கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினர் ஊடுருவல் செய்யும் சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை'' எனத் தமிழ்நாடு பிராந்திய கடற்படைத் தலைமை அதிகாரி தெரிவித்தார்.

கடற்படை தமிழ்நாடு பிராந்திய தலைமை அதிகாரி

உச்சிப்புளி அருகே உள்ள இந்திய கடற்படையின் விமான படைத் தளமான ஐ.என்.எஸ் பருந்துவில் கடலோரப் பாதுகாப்பு மற்றும் மீனவர்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்திருந்த இந்திய கடற்படையின் தமிழ்நாடு பிராந்திய தலைமை அதிகாரி அலோக் பட்நாயக் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மீனவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த உதவி வருகின்றனர். அவர்கள் சமுதாயத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். நாட்டின் பாதுகாப்பில் கடற்படை முக்கிய அங்கம் வகிக்கிறது. அதேபோல மீனவர்களைப் பாதுகாப்பதிலும் அக்கறை கொண்டுள்ளது.

நாட்டின் கடல் பரப்பு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கடலோரக் காவல்படை, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுங்க இலாகா, போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, வன பாதுகாப்புத் துறை மற்றும் பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் இந்திய கடற்படையினர் ஒருங்கிணைந்து ஈடுபடுவது குறித்த ஆலோசனை நடத்துகிறோம். சர்வதேச கடல் எல்லை பகுதியில் அகதிகள் ஊடுருவலை தடுக்கவும் கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் 24 மணி நேரமும் இடைவிடாத கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை தவிர ரோந்து பணிகளும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளின் போது மீனவர்கள் எங்களின் கண்களாகவும், காதுகளாகவும் இருந்து உதவுகின்றனர். அவர்கள் மூலம் தகவல்களை பெற அவர்களுடன் இணக்கமாக இருந்து வருகிறோம். அவர்கள் எல்லை தாண்டுவதை ஜி.பி.எஸ் கருவி மூலமே அறிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய கடற்படை அதிகாரி 
 

அதே நேரத்தில் இலங்கை கடற்படையினர் நமது கடல் பரப்பிற்குள் ஊடுருவதை கண்காணிக்க நம்மிடம் வசதிகள் உண்டு. ஆனால் அவர்கள் எல்லை தாண்டி வருவதில்லை. இலங்கை  நம்நாட்டின் நட்பு நாடு. அதனடிப்படையில் இருநாட்டு பாதுகாப்பு குறித்து  6 மாதங்களுக்கு ஒரு முறை இரு தரப்பினரும் ஆலோசனை செய்து வருகிறோம். உச்சிப்புளியில் உள்ள கடற்படை விமான தளத்தினை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அவ்வாறு விரிவுபடுத்தப்பட்ட பின் இங்கு பெரிய ரக விமானங்கள் வந்து செல்ல முடியும். இதற்கென தமிழக அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது'' என்றார். இதைத் தொடர்ந்து நடந்த பாதுகாப்பு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் நடராஜன், டி.ஐ.ஜி  காமினி, காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, பருந்து விமான தள கமாண்டர் குல்திப் தங்சாலே மற்றும் பல்வேறு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.