`எந்த உறுப்பு வேணும்?’ - சர்ச்சையில் சிக்கிய சென்னை மருத்துவமனை

தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் முறைகேடு நடந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. `அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு வெளிநாட்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த விவகாரத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று வசமாகச் சிக்கியுள்ளது' என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

உடல் உறுப்பு மருத்துவமனை

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்று ஆணையத்தைக் கடந்த 2014-ம் ஆண்டு அமைத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இந்த ஆணையத்தின் விதிமுறைகளின்படி, உறுப்பு மாற்று தேவைப்படுவோர் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னரே வரிசைப்படி உறுப்பு தானம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர் ஹிதேந்திரன் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட விழிப்பு உணர்வு காரணமாக, பிற மாநிலங்களைவிடவும் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. "தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில், வெளிநாட்டைச் சேர்ந்த 25 சதவிகிதம் பேருக்கு இதய அறுவைசிகிச்சையும் 33 சதவிகிதம் பேருக்கு நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சையும் நடந்துள்ளது. இதில், இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாமல், வெளிநாட்டவர்களுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது' என விவரித்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர், இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தி ஒன்றையும் நம்மிடம் மேற்கோள் காட்டினார். 

"இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ள விரும்புவோர் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில், இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து பெறப்படும் உடல் உறுப்புகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள நபர்களின் வரிசை எண்படி முன்னுரிமை வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மருத்துவமனைகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவது இல்லை. இதற்கு மாறாக, இந்திய நோயாளிகளைத் தவிர்த்து, இணையதளத்தில் பதிவு செய்துள்ள வெளிநாட்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

மருத்துவமனைகளில் நடந்து வரும் முறைகேடுகளை இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். மேலும், சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் அண்மையில் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட இதயம் வெளிநாட்டைச் சேர்ந்த நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சர்ச்சையை அடுத்து, டெல்லியில் அவசரக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார் சுகாதாரப் பணிகள் சேவை இயக்குநர். அந்தக் கூட்டத்தில், `உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகப் பின்பற்றப்படும் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். வெளிநாட்டவர்களுக்கு உறுப்புகளை ஒதுக்கீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்' எனவும் எச்சரித்திருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!