`சாப்பாடும் கொடுக்கல; தண்ணீரும் கிடையாது’ - விழிப்பு உணர்வு பேரணியில் மாணவர்களுக்கு நடந்த சோகம்

மாணவர்கள் காலை உணவுக்கு என்ன செய்வார்கள் என்றும் யோசித்திருக்க வேண்டும். இப்படி தண்ணீர்கூட கொடுக்காமல் தவிக்க வைத்து ஒரு விழிப்பு உணர்வு பேரணியை நடத்தலாமா. இனிமேலாவது இதுபோன்ற விஷயத்தில் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும்'' என்றனர் சமூக ஆர்வலர்கள்.

உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்துக்காக நடத்தபட்ட பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் பச்சை தண்ணீர்கூட கொடுக்கவில்லை மாவட்ட  நிர்வாகம். இதனால் பசியிலும், தாகத்திலும் மாணவர்கள் தவித்ததைப் பார்க்கும்போது பெரும் வேதனையாக இருந்தது. இதை அதிகாரிகளும் ஆசிரியர்களும் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

விழிப்பு உணர்வு

உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினமாக ஜூன் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தில் தமிழகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். தஞ்சாவூரில் இதற்காக அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்பு உணர்வு பேரணி நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 9.30 மணிக்கு ரயிலடியில் கலெக்டர் அண்ணாதுரை இந்தப் பேரணியைக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதற்கு நகரத்தில் உள்ள முக்கியமான நான்கு அரசுப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் காலை 8 மணிக்கெல்லாம் வரவழைக்கபட்டனர். மாணவர்கள் கையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகள் கொடுக்கப்பட்டதுடன் கோஷம் போடுவது குறித்து விளக்கினார்கள் அதிகாரிகள். ரயிலடியில் தொடங்கிய பேரணி முக்கிய இடங்களின் வழியாக அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியை அடைந்து அங்கு உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கிராமப்புற பகுதிகளிலிருந்துதான் அதிகம் வருவார்கள்.

தண்ணீர் குடிக்கும் மாணவர்கள்

காலை 9.30 மணிக்கு தொடங்கிய பேரணிக்கு 8 மணிகெல்லாம் வர வைத்துவிட்டார்கள். சீக்கிரமே வந்ததால் பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு சாப்பிடவில்லை. மேலும், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து பலத்த கோஷம் போட்டவாறே நடந்தே சென்றனர். ஒரு பக்கம் பசியால் தவித்த மாணவர்கள் தண்ணீர்கூட இல்லாமல் மிகவும் சோர்வாகினர். இதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாத முக்கிய அதிகாரி ஒருவர் பேரணியுடன் காரில் அமர்ந்தபடியே வந்தார். அவரின் டிரைவர் காரை ஓட்டியபடியே செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தார். இதை அந்த அதிகாரி கொஞ்சமும் தடுக்கவில்லை.

`சார், தவிக்குது கொஞ்சம் தண்ணீர் கொடுங்க' என வாத்தியார் ஒருவரிடம் மாணவர் கேட்க, `இன்னும் கொஞ்சம் தூரம்தான் பள்ளி வந்துவிடும்' என்று அழைத்துச் சென்றார். ஒரு கட்டத்தில் மிகவும் சோர்வடைந்த மாணவர்கள் கடை ஒன்றில் தண்ணீர் வாங்கிக் குடித்தனர். அதற்கும் பேரணியில் செல்லும்போது இப்படி செய்யக் கூடாது என விரட்டிவிட்டார் பேரணியை ஒருங்கிணைத்த ஒருவர். ஒரு வழியாக 11 மணியளவில் பேரணியை முடித்த மாணவர்கள் கடும் பசியுடனேயே வகுப்புக்குள் சென்றுவிட்டார்கள்.

விழிப்பு உணர்வில் பங்கேற்ற மாணவர்கள்

''குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக நடத்தப்பட்ட இந்தப் பேரணியிலேயே பள்ளி மாணவர்கள் உணவு, தண்ணீர் கொடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டது வேதனையின் உச்சம். பேரணியில் கலந்துகொள்ளும் மாணவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் உயர் அதிகாரிகளிடம் பெயர் வாங்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அதிகாரிகள், மாணவர்கள் காலை உணவுக்கு என்ன செய்வார்கள் என்றும் யோசித்திருக்க வேண்டும். இப்படி தண்ணீர்கூட கொடுக்காமல் தவிக்க வைத்து ஒரு விழிப்பு உணர்வு பேரணியை நடத்தலாமா. இனிமேலாவது இதுபோன்ற விஷயத்தில் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும்'' என்றனர் சமூக ஆர்வலர்கள்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!