வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (12/06/2018)

கடைசி தொடர்பு:19:50 (12/06/2018)

`இப்படியொரு வள்ளலைப் பார்த்ததில்லை!' - முதியவர் மறைவால் கண்ணீரில் மூழ்கிய மாதரவேளூர்

மாதரவேளுர் ஊராட்சி மன்றத் தலைவராகத் தொடர்ந்து 30 வருடங்கள் இருந்து சேவையாற்றி இருக்கிறார் ராமகிருஷ்ணன். கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி, குறைவின்றி பராமரித்து வந்திருக்கிறார். மாதரவேளுர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்திருக்கிறார்.

தனது வாழ்நாள் முழுவதையும் பொது வாழ்வுக்கு அர்ப்பணித்த ராமகிருஷ்ணன் மறைவால் அந்தக் கிராமமே கண்ணீர்க் கடலில் மூழ்கியது.  

ராமகிருஷ்னன்

நாகை மாவட்டம், சீர்காழி அருகே மாதரவேளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் மகன் ராமகிருஷ்ணன். வயது 90. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு எழுத, படிக்கத் தெரியும் அளவுக்குதான் படிப்பு படித்துள்ளார். ஆனால், மாதரவேளுர் ஊராட்சி மன்றத் தலைவராகத் தொடர்ந்து 30 வருடங்கள் இருந்து சேவையாற்றியிருக்கிறார் ராமகிருஷ்ணன். கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி, குறைவின்றி பராமரித்து வந்திருக்கிறார். மாதரவேளுர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்திருக்கிறார். இந்த நிலத்தில்தான் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு, கடந்த 2012 முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது. சொந்த வீடு இன்றி தவித்த ஏழைத் தொழிலாளி ஒருவருக்கு 35 சென்ட் நன்செய் நிலத்தைத் தானமாகக் கொடுத்திருக்கிறார். குழந்தைகள் மேல் அதிகப் பிரியமுள்ள ராமகிருஷ்ணன், அனைத்து விழாக் காலங்களிலும் எல்லாக் குழந்தைகளையும் அழைத்து அவர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுத்து, இனிப்பும் செலவுக்கு பணமும் தந்திருக்கிறார்.  

ராமகிருஷ்ணன் மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். இத்தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் மின்வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நலன் கருதி பல போராட்டங்களில் கலந்திருக்கிறார். தீண்டாமைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்த ராமகிருஷ்ணன், எளிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஊர் பிரச்னை என்று யாரும் காவல் நிலையம் சென்றதில்லை. அனைத்தையும் ராமகிருஷ்ணன் பேசி சமாதானமாகத் தீர்த்து வைத்திருக்கிறார். மேலும், கடந்த 45 ஆண்டுகளாகப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராகவும், 45 ஆண்டு காலம் கொள்ளிடம் வட்டார நன்செய் புன்செய் விவசாயச் சங்கத் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். 2 முறை கூட்டுறவு சங்கத் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

இப்படி பொது வாழ்க்கையில் நிஜ ஹீரோவாக வாழ்ந்து வந்த ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு உடல்நலக் குறைவால் காலமானார். இதையறிந்த சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். ராமகிருஷ்ணன் மறைவையொட்டி அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கு நேற்று உள்ளுர் விடுமுறை விடப்பட்டது. ராமகிருஷ்ணனின் இறுதி ஊர்வலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கண்களில் நீர் வழிந்தபடி நடந்து சென்றது அனைவரின் உள்ளத்தையும் உருகச் செய்தது. ராமகிருஷ்ணனின் உடல் அவரின் சொந்த இடத்தில், அவர் மனைவி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

இராமகிருஷ்ணன் இன்று மறைந்துவிட்டாலும், பொது வாழ்வில் எப்படி ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார்.