வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (12/06/2018)

கடைசி தொடர்பு:19:23 (12/06/2018)

கோடிக்கணக்கில் நிதி, பிரமாண்ட மாளிகைகள் - மலைக்க வைக்கும் ஆளுநர்களின் வாழ்க்கைமுறை!

ராஜ வாழ்க்கை வாழும் ஆளுநர்கள்

கோடிக்கணக்கில் நிதி, பிரமாண்ட மாளிகைகள் - மலைக்க வைக்கும் ஆளுநர்களின் வாழ்க்கைமுறை!

`தனி ஒரு மனிதருக்கு இவ்வளவு பெரிய இடம் தேவையா?!' - கவர்னர் மாளிகையைக் கடக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் கேள்வி இது. `மக்கள் வரிப்பணத்தில் மகோன்னத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார் கவர்னர்' என்ற எண்ணம் எழாத மனமில்லை. போதாக்குறைக்கு என்.டி.திவாரி வகையறாக்களால் மக்கள் நொந்துபோன கதையும் உண்டு.

கவர்னர்கள் விஷயத்தில் மக்களின் மனநிலை இப்படியிருக்க, டெல்லியில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டுக்குப் பிறகு, கவர்னர்கள் சம்பளம் மூன்று மடங்கு உயர்ந்திருப்பது எரியும் கொள்ளியில் எண்ணெயை விட்டதுபோலுள்ளது. அதாவது  கவர்னர்களுக்கான படி 1.10 லட்சம் ரூபாயிலிருந்து 3.50 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரின் ஆண்டுச் சம்பளம் 45 லட்சம் ரூபாய். இவர்களுக்குச் சம்பளம் கொசுறுதான். இந்நிலையில் ஆளுநர்களுக்கு ஆண்டுச் செலவினங்களுக்கு என ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு எனத் தெரிந்தால் மயக்கமே வந்துவிடும்!

உதகை ஆளுநர் மாளிகை

ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில் குடியரசுத் தலைவர் தலைமையில் ஆளுநர்கள் மாநாடு  நடைபெறும். பிரதமரும் மாநாட்டில் பங்கேற்பார்.  மாநாட்டில் ஆளுநர்களின் தேவை, சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். ஆளுநர்களுக்கு வழங்கப்படும் படிகள், பயணப்படிகள் உள்ளிட்ட அலவன்ஸ்கள் குறித்தும் விவாதிக்கப்படும். ஒவ்வோர் ஆளுநருக்கும் ஆண்டுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து, குடியரசுத் தலைவர் அலுவலகத்துடன் பேசி உள்துறை அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும். ஆளுநர் மாளிகைப் பராமரிப்புச் செலவு, பணிபுரியும் அலுவலர்கள் போன்றவற்றைக் கவனத்தில்கொண்டு ஆளுநர்களுக்கு ஆண்டுச் செலவு நிதி ஒதுக்கப்படுகிறது. 

இந்தியாவில் உள்ள ஆளுநர்கள் மாளிகைகளில் மேற்குவங்கம், தமிழ்நாடு ஆளுநர் மாளிகைகள்தாம் பாரம்பர்யமான கட்டடக்கலைக்குப் பேர்போனவை. எனவே, இந்த இரு ஆளுநர்களுக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. மேற்குவங்க ஆளுநருக்கு கொல்கத்தா மற்றும் குளிர்ப்பிரதேசமான டார்ஜிலிங்கில் மாளிகைகள் உள்ளன. கொல்கத்தா நகரின் மத்தியில் உள்ள இந்த ஆளுநர் மாளிகை, 1799-1803 ஆண்டு கட்டப்பட்டது. 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராஜ்பவனில் 84 ஆயிரம் சதுரஅடி பரப்பளவுக்குக் கட்டடங்கள் உள்ளன. இங்கு 950 அலுவலர்கள், ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்தியாவிலேயே அதிகமாக மேற்குவங்க ஆளுநருக்கு ஆண்டுக்கு 1.81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆளுநருக்கான உணவு, சுற்றுப்பயணம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், இதரச் செலவுகள் இதில் செய்துகொள்ள வேண்டும். இதுதவிர ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்புக்கு ஃபர்னிச்சர் பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம். இரு ராஜ்பவன் கட்டங்களையும் பராமரிக்க, ஆண்டுக்கு 76 லட்சம் ரூபாய் தனியாக வழங்கப்படுகிறது. மேற்குவங்க ஆளுநர் மாளிகைக்கான செலவு மட்டும் ஆண்டுக்கு மூன்றரை கோடி ரூபாய் செலவாகிறது. 

இந்தப் பட்டியலில் தமிழக ஆளுநருக்கு இரண்டாவது இடம். தமிழக கவர்னர் செலவினங்களுக்கு என்று ஆண்டுக்கு 1.66 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. சென்னை கிண்டி மற்றும் உதகையில் இரு ஆளுநர் மாளிகைகள் உள்ளன. கொல்கத்தாவைப்போலவே இவையும் பாரம்பர்யமான கட்டடங்களே! சென்னையில் உள்ள ராஜ்பவன் 156.14 ஏக்கர் பரப்பிலும், உதகை ராஜ்பவன் 86.72 ஏக்கர் பரப்பிலும் அமைந்துள்ளன. இந்தக் கட்டடங்களைப் பராமரிக்க ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 7.50 லட்சம் ரூபாய்க்கு ஆண்டுக்குப் புதிய ஃபர்னிச்சர் பொருள்கள் வாங்கிக்கொள்ளலாம். தமிழக ஆளுநர் மாளிகைக்கான ஆண்டுச்செலவு கிட்டத்தட்ட 8 கோடி ரூபாயைத் தொடுகிறது. 

மகாராஷ்டிராவில் மும்பை, புனே, நாக்பூர் நகரங்களில் கவர்னர் மாளிகைகள் உள்ளன. மகாராஷ்டிர மாநில ஆளுநரின் செலவினங்களுக்காக ஆண்டுக்கு 1.14 கோடி ரூபாயும், கட்டடப் பராமரிப்புக்காக 1.8 கோடி ரூபாயும், ஃபர்னிச்சருக்காக 26 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச ஆளுநருக்கு ஆண்டுச்செலவுக்காக  66 லட்சம் ரூபாய், கட்டடப் பராமரிப்புக்காக  3.5 கோடி ரூபாயும், ஃபர்னிச்சர் பொருள்களுக்காக 10 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன. பீகார் மாநில ஆளுநருக்கு ஆண்டுக்கு மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 

இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் உள்ளன.  புதுச்சேரி போன்ற ஏழு யூனியன் பிரதேசங்களுக்குத் துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தனது தனிச்செயலாளர் முதல் பணிக்குத் தேவையான ஒவ்வொருவரையும் ஆளுநர் தன் விருப்பப்படி நியமித்துக்கொள்ள முடியும். ஆளுநர்களுக்கு, மக்கள் வரிப்பணத்திலிருந்து மத்திய அரசு இவ்வளவு செலவு செய்கிறது. `இதனால் மக்களுக்கு ஏதாவது பயன் இருக்கிறதா?' என்று கேள்வி எழுப்பினால், நம்மை சரி விடுங்கள்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்