வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (12/06/2018)

கடைசி தொடர்பு:23:30 (12/06/2018)

`ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்துங்கள் '- லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

2008-ம் ஆண்டு முதலமைச்சரின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டதோடு, விசாரணை அறிக்கையைச் சீலிட்ட கவரில் ஆகஸ்ட் 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்தது.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் விசாரணை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகாந்திரம் இல்லை என்று முடக்கப்பட்ட இந்த வழக்கை, முறையாக விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புதுறையை முடுக்கி விட்டள்ளது உயர்நீதிமன்றம்.

ராஜேந்திர பாலாஜி


எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்து வருபவர் ராஜேந்திர பாலாஜி. இவர் 2011 முதல் 2013 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக மதுரை தல்லாக்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில்,  ``ராஜபாளையம் அருகே 6 கோடி ரூபாய் மதிப்புள்ள 35 ஏக்கர் நிலத்தை 72 லட்ச ரூபாயாகக் குறைத்து மதிப்பிட்டு  வாங்கியுள்ளதாகவும், அதேபோல்  திருத்தங்கலில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை  27 லட்சத்துக்கு வாங்கி, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், இதை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை" என்றும் குறிபிட்டுத்திருந்தார். 

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம்,   ``ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கொடுக்கப்பட்ட புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையை முறையாக  நடத்தவில்லை. அவர் அமைச்சரான காலத்திலிருந்து விசாரிக்கக் கூடாது,  1996-ல் திருத்தங்கல் பேரூராட்சித் துணைத்  தலைவராக இருந்த காலத்திலிருந்து அவருடைய சொத்து விவரத்தை விசாரிக்க வேண்டும். அப்போதிருந்தே அவர் பொது ஊழியராகி விடுகிறார். இதை எஸ்.பி.அந்தஸ்துக்குக் குறையாத ஐ.பி.எஸ். அதிகாரிகள் மூலம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும். விசாரணை அறிக்கையைச் சீல் செய்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி சமர்ப்பிக்க  வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளனர் நீதிபதிகள். மேலும், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 6 ம் தேதி ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.

ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் புகார் எழுந்திருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவையில் இரண்டாவது அமைச்சர் மீது புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.