வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (12/06/2018)

கடைசி தொடர்பு:20:50 (12/06/2018)

வீட்டுச் சுவர் முழுக்க அர்ஜென்டினா கொடி! - கொல்கத்தா டீக்கடைக்காரரின் கால்பந்து பாசம்!#Football

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு அடுத்தபடியாக கால்பந்து விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதை நிரூபித்திருக்கிறார் கொல்கத்தா டீ கடை உரிமையாளர் ஒருவர்.

கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் 14-ம் தேதி ரஷ்யாவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் ஜெர்மனி, ஸ்பெயின், அர்ஜென்டினா, பிரேசில், பெல்ஜியம் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ, சோச்சி, பீட்டர்ஸ்பர்க், கஸான் ஆகிய நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு, தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் வகையில் வீட்டுச் சுவரில் வண்ணம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் கொல்கத்தாவில் டீக்கடை நடத்தி வரும் ஷிப் சங்கர் பாத்ரா என்பவர். இத்தொடரைக் காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அர்ஜென்டினா அணியின் ஒன் மேன் ஆல் ரவுண்டராக வலம் வரும் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் இவர். உலகக் கோப்பைத் தொடரை நேரில் பார்க்கும் ஆர்வத்தோடு, 60 ஆயிரம் ரூபாயைச் சேமித்து வைத்திருந்தார். இதற்காக, கொல்கத்தாவில் உள்ள விமான சேவை ஏஜென்சியிடம் தனது விருப்பைத் தெரிவித்திருக்கிறார். ஆனால், `நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பணம், பயணத்துக்குப் போதுமானதாக இருக்காது' என்று கூறி அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டனர் ஏஜென்சி அதிகாரிகள்.

இதனையடுத்து, அர்ஜென்டினா அணிக்கு ஆதரவு அளிக்கும் விதத்திலும் லயோனல் மெஸ்ஸி மீதான அன்பை வெளிப்படுத்தும்விதத்திலும் தன்னுடைய வீட்டுச் சுவர் முழுவதும் அர்ஜென்டினா அணியின் ஜெர்சியின் வண்ணத்தைப் பெயின்ட் செய்திருக்கிறார். வெள்ளை மற்றும் நீல நிறத்தில் காட்சியளிக்கும் அவரது வீட்டை, ஆச்சர்யத்துடன் கடந்து செல்கின்றனர் கொல்கத்தா வாசிகள்.