வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (12/06/2018)

கடைசி தொடர்பு:21:10 (12/06/2018)

பெண்ணின் உடலிலிருந்து 23 கிலோ சதையை அகற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனை சாதனை!

தூத்துக்குடி அரசு மருத்துவனை, 50 வயது பெண்ணின் உடலிலிருந்து, 23 கிலோ சதையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளது. 

அரசு மருத்துவமனையில் செல்வி

தூத்துக்குடி மாவட்டம், லைன்ஸ் டவுண் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி, வயது 50. இவரது கணவர் தாமஸ், மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு, ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

செல்வி, கடந்த சில வருடங்களாகவே உடல் எடை அதிகரிக்கும் நோயால் அவதிப்பட்டு  வந்துள்ளார். அவரின் உடல் எடை படிப்படியாக உயர்ந்து, 170 கிலோவாக அதிகரித்துள்ளது. இதனால் அவர் நடப்பதற்கு கூட சிரமப்பட்டு வந்துள்ளார்.

பல்வேறு மருத்துவர்களிடம்  மருத்துவம் பார்த்த செல்வியின் உடல் எடையில் எந்த மாற்றமும் இல்லை. பின், அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த, பிளாஸ்டிக் சர்ஜரி துறை மருத்துவர்கள் அவரது உடலிலிருந்து தேவைக்கு அதிமான சதைகளை குறைத்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். 

அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

இதன்படி, பிளாஸ்டிக் சர்ஜரி துறையைச் சேர்ந்த ராஜ்குமார் தலைமையில், கண்ணன், அருணாதேவி ஆகியோர் கொண்ட மருத்துவர் குழுவும், மயக்கமருந்து துறையைச் சேர்ந்த, முத்து செண்பகம், பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவும் அறுவை சிகிச்சை செய்தது. 4 மணி நேரம் வரை இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அறுவை சிகிச்சைக்கு முன்பு 170 கிலோ உடல் எடையுடன் இருந்தார். இதில், 23 கிலோ சதைப்பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. மீதமுள்ள 147 கிலோ உடல் எடையில், 37 கிலோ உடல் எடையை டயட் மூலம் குறைத்துள்ளார். தற்போது இவரது உடலின் எடை 117 கிலோ ஆகும்.

கடந்த ஏப்ரல், 19 -ம் தேதி செல்விக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது உடலிலிருந்து, 23 கிலோ தேவைற்ற சதை குறைக்கப்பட்டது. 50 வயதான செல்வியின் அதிக உடல் எடை காரணமாக, அவருக்கு, ரத்த அழுத்தம், நீரழிவு, மூச்சுத் திணறல் போன்ற நோய்களின் பாதிப்பு இருக்கும் என்பதால், அவர் தொடர்ந்து ஒரு மாதம் ஐ.சி.யு.,வில் வைத்து கண்காணிக்கப்பட்டார்.

பூரண குணமான பின்பு இன்று அவர் அரசு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து செல்வி கூறுகையில், ``என் உடல் எடை காரணமாக,  நடக்கக்கூட முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். இப்போ ரொம்ப லேசாக உணருகிறேன். இங்குள்ள டாக்டர்ஸ் எல்லாரும் என்னை நல்லா கவனிச்சுக்கிட்டாங்க." என்றார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க