வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (12/06/2018)

கடைசி தொடர்பு:20:16 (12/06/2018)

``பணம் கொடுத்தால் பிணம்" லஞ்சம் கேட்கும் கோவை அரசு மருத்துவமனை ஊழியர்!#Video

கோவை அரசு மருத்துவமனையில், பிரேதப் பரிசோதனை செய்த சடலத்தை ஒப்படைக்க, பிணவறை ஊழியர் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில், பிரேதப் பரிசோதனை செய்த சடலத்தை ஒப்படைக்க, பிணவறை ஊழியர் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

லஞ்சம்

கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 8 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். கோவை மட்டுமல்லாமல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற பகுதிகளிலிருந்தும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். அப்படிப் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் நோயாளிகளில் யாராவது இறக்கும்போது, அவர்களின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வார்கள். பிரேதப் பரிசோதனை செய்து, சடலத்தை சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது, ரூ.1000 முதல் 3000 வரை லஞ்சம் கேட்டு வருவதாக நீண்ட நாள்களாகவே புகார் உள்ளது. மேலும், பணத்தைக் கொடுத்தால்தான், பிணத்தைக் கொடுப்போம் என மக்களிடம் அடாவடி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிணவறையில் சானிட்டரி பணியாளராகப் பணிபுரிபவர் பரமசிவம், பிரேதப் பரிசோதனை முடிந்து சடலத்தை ஒப்படைக்கும்போது, அவர்கள் உறவினர்களிடம் லஞ்சம் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பரமசிவம் லஞ்சம் கேட்டவுடன் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், பொருள் மட்டும் வாங்கிட்டு வாங்க (துணி,காகிதம் உள்ளிட்ட பொருள்கள்). 50, 100 வாங்க நான் என்ன பிச்சைக்காரனா எனப் பரமசிவம் கேட்கிறார். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் பணம் கொடுத்து சடலத்தை வாங்கியுள்ளனர்.

பரமசிவம் லஞ்சம் கேட்கும்போது, அருகில் ஒரு போலீஸ் அதிகாரியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள பரமசிவம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே புகாரில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணிக்கு வந்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் உதவி ஜமேதாராக இருக்கும் செல்லகிருஷ்ணன், மருத்துவமனையில் ஊழியர்களிடம், பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார். அதனால்தான் இங்கு லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஜமேதாரர் பொறுப்பில் இருந்தவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார். இதனால், செல்லகிருஷ்ணன் காட்டில் பணமழை கொட்டுகிறது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகனிடம் கேட்டபோது, ``ஒவ்வொரு முறை மீட்டிங் போடும்போதும், நோயாளிகளிடம் கணிவாகப் பேச வேண்டும். லஞ்சம் வாங்கக் கூடாது எனச் சொல்லி வருகிறேன். இது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காகத்தான், பிணவறை ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறோம். கடந்த மாதம் மட்டும், கோவை அரசு மருத்துவமனையில் 329 பிரேதப் பரிசோதனை நடைபெற்றுள்ளன. இதற்காக, 2 லட்சத்து 14 ரூபாய் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதை, மருத்துவக் கல்வி இயக்குநரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.